கிழக்கு மாகாணத்தின்

மட்டக்களப்பு மாவட்ட மண் கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி- விவசாய அமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு

அனுமதி வழங்குவது யார் என்றும் கேள்வி
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 12 22:23
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 13 13:25
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண் வளங்கள் வெளிமாவட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக கதிரவெளி விவசாய அமைப்பின் தலைவர் சு.தங்கவேல் தெரிவித்தார். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெருகல் ஆற்றிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் மணல், கொழும்புக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதனால் இந்தக் கிராமத்தின் விவசாயம் பாதிக்கப்படுவதாக தங்கவேல் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
வெருகல் ஆற்றுப் பகுதியான கல்லரிப்பு பகுதியில், சிங்கள மண் வியாபாரிகள் மூன்று பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு மணல் அகழ்வு இடம்பெறுகிறது.

ஆனால், வெருகல் ஆற்றில் இடம்பெறும் மணல் அகழ்வுக்கு தமது அலுவலகம் அனுமதி வழங்கவில்லை. இவற்றுக்கான அனுமதி இலங்கைப் புவிசரிதவியல் திணைக்களகத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக வாகரைப் பிரதேச செயலாளர் கூறியதாக தங்கவேல் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இரண்டு லோட் மண்ணுக்கான அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கும் தங்கவேல், மண் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 30 கீயூப் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு வாழும் மக்கள் கல்வி அறிவு குறைந்தவர்கள் என்பதற்காக யார் வேண்டுமானாலும், எதனையும் செய்யலாம் என்ற எண்ணத்தில் கொழும்பு அரசாங்கத்தின் கீழ் இயங்கும் திணைக்கள அதிகாரிகள் செயற்படுவதாகவும் கதிரவெளி விவசாய அமைப்பின் தலைவர் சு.தங்கவேல் கவலை வெளியிட்டார்.

இந்தப் பிரதேசத்தினதும், மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மண் கொள்ளைகளைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் நாளைய சந்ததியின் எதிர்காலம் பாழாகிவிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், வேளாண்மை செய்யப்படும் வயல்காணிகளில் இரவு வேளையில் சட்டவிரேதமாக இடம்பெறும் மணல் அகழ்வினால் தமிழ் மக்களின் வாழ்வாதாரத் தொழிலான வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைப்புத் தலைவர் சு.கேசவன் முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.