கோட்டாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் மத்தியில்

சஜித் அணிக்குள் முரண்பாடுகள் அதிகரிப்பு- எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள் தொடருகின்றன

நாடாளுமன்றக் குழுக் கூட்டமும் ஒத்திவைப்பு
பதிப்பு: 2022 மே 03 09:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 09 13:06
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதிவியில் இருந்து விலக வேண்டுமெனப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையிலும் அரசாங்கம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் பலர் பங்குபற்றவில்லை.
 
கயந்த கருணாதிலக்க, ஹெக்டர் அப்புஹாமி, சமிந்த விஜேசிறி, ஹேஷh விதானகே, ரோஹினி கவிரத்ன, காவிந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களே இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மே தின கூட்டத்தில் சரத் பொன்சேகத. ஹரிக் பெர்ணாண்டோ ஆகியோர் வாக்குவாதப்பட்டிருந்தனர். இந்த வாக்குவாதம் தொடர்பாகவே இன்றைய கூட்டத்தில் சர்ச்சை எழுந்தது. சஜித் பிரேமதாச மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

உறுப்பினர்கள் தர்க்கப்பட்டமையினால் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தித் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா அரசியல் கட்சிகள் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்து வெளியிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் மூன்று பில்லியன் டெலார்களை அபகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அனுர குமாரதிஸாநாயக்கா மேலும் தெரிவித்தார்.