பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள்

வடக்குக் கிழக்கில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 51 குடும்பங்களுக்கு இந்திய நிவாரணம்

திங்கட்கிழமை முதல் விநியோகம்
பதிப்பு: 2022 மே 29 07:34
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 29 12:19
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கைக்கு வந்தடைந்துள்ள இந்திய நாட்டின் மனிதாபிமான உதவி திட்டத்தின் கீழான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களில் வாழும் சுமார் 3 லட்சத்து 46 ஆயிரத்து 51 குடும்பங்களுக்கு எதிர்வரும் திங்கள் முதல் விநியோகிக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களையும் நிர்வகிக்கும் அரசாங்க அதிபர்களின் மேற்பார்வையில் துரித கதியில் மேற்கொள்ளபட்டு வருகிறது.
 
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே, தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும், வசிக்கும் குறைந்த வருமானம் உடைய மேற்படி எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு இந்திய நாட்டில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள குறித்த உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள மேற்படி உலர் உணவு நிவாரணப் பொருட்கள் இலங்கை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் பணிப்பின் பேரில் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலும் வசிக்கும் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 75343 குடும்பங்களுக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 9199 குடும்பங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 18485 குடும்பங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 15857 குடும்பங்களுக்கும், வவுனியா மாவட்டத்திற்கு 16470 குடும்பங்களுக்கும்,மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 84191 குடும்பங்களுக்கும், திருமலை மாவட்டத்திற்கு 51689 குடும்பங்களுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கு 74817 குடும்பங்களுக்கும், மேற்படி இந்திய நாட்டின் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் திங்கள் தொடக்கம் வழங்கப்படவுள்ளது.

தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிப்பின் பேரில் தமிழக அரசினால் மனிதாபிமான உதவி திட்டத்தின் கீழான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றிய கப்பல் கடந்த 18ஆம் திகதி புதன் சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

தமிழக முதல்வர் குறித்த கப்பலை கொடி அசைத்து இலங்கைக்கு அனுப்பிவைத்தார். இந்த நிலையில் குறித்த இந்திய கப்பல் கடந்த 22ஆம் திகதி ஞாயிறு மாலை இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த நிலையில் கொழும்பு துறைமுகத்தை கப்பல் மூலம் வந்தடைந்த குறித்த நிவாரணப் பொருட்களை, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கையளித்தார்.

இதேவேளை இந்திய அரசினால் அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 25 தொன்கள் நிறையுடைய 260 மில்லியன் இந்தியா ரூபாய்கள் பெறுமதி உடைய ஒரு தொகுதி அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த மருந்துப் பொருட்கள் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பினால் இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று வெள்ளி கையளிக்கப்பட்டது..