வடமாகாணம்

தலை மன்னார் மணல் தீடையில் மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை

இலங்கைக் கடற்படை மீது மீனவர் சங்கங்கள் குற்றச்சாட்டு
பதிப்பு: 2022 ஜூன் 04 19:43
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 05 23:23
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள, மணல் தீடையில் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த ஏழு தமிழ் மீனவர்கள் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் ஏழு பேர் தாக்குதல் உள்ளாகியது தொடர்பில் பேசாலை மீனவர் சங்கத்திற்கும், பேசாலை பங்கு தந்தைக்கும், தாக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ள நிலையில் கடற்படை உயர் அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; கடந்த 2ஆம் திகதி வியாழன் மாலை 3 மணியளவில் பேசாலையைச் சேர்ந்த மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல தயாரான நிலையில் வழமைபோல் அவர்களின் மீன்பிடி படகுகள், பேசாலையில் நிலைகொண்டுள்ள இலங்கை கடற்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பேசாலை மீனவர்கள் சிலருக்கும், பேசாலையில் உள்ள இலங்கை கடற்படையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அது கடும் வாய்த்தர்க்கமாக மாறியது.

இந்தநிலையில் கடற்படையினரால் பேசாலை மீனவர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், அவர் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இரண்டு தரப்பினர்களுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்ட நிலையில் அன்றைய தினம் பேசாலை மீனவர்கள் வழமைபோல் கடற்றொழிலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் பேசாலையைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் சம்பவதினம் வியாழன் மாலை 5.30 க்கு தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அவர்களைப் படகு மூலம் பின் தொடர்ந்து, அவ்விடத்திற்கு வருகை தந்த இலங்கை கடற்படையினர், குறித்த பேசாலை மீனவர்களையும் அவர்களின் படகினையும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியதுடன் தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள மணல் தீடைக்கு மீனவர்களை செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

எனினும் கடற்படையின் உத்தரவினை ஆட்சேபித்த பேசாலை மீனவர்கள், தம்மை மேலும் விசாரணை செய்யவேண்டும் எனில், கடற்படை முகாமிற்கு அழைத்து செல்ல முடியும் எனவும், இவ்வாறான நிலையில் ஆள் அரவமற்ற மணல் தீடைக்கு அழைத்து செல்லவேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து இலங்கை கடற்படையினரிடம் கேள்வி எழுப்பினர்.

எனினும் அதனைப் பொருட்படுத்தாத கடற்படையினர், பேசாலை மீனவர்களை தீடைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடல் எல்லைக்குள் அமைந்துள்ள மணல் தீடையொன்றில் தரையிறக்கப்பட்ட பேசாலை மீனவர்கள், அங்கு கடற்படையினரால் தீவிர உடல் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவர்களின் மீன்பிடி படகுகள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இதற்கு முன்னதாக பேசாலை மீனவர்கள் கடற்படையினருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டவேளை அதனை திறன்பேசி மூலம் பதிவு செய்த கடற்படையினர் குறித்த வீடியோ காட்சியை மணல் தீடைக்கு எடுத்து வந்தநிலையில் அவ்வீடியோ காட்சியைப் பார்வையிட்டு, தீடையில் உள்ள மீனவர்கள் மத்தியில் கடற்படையினருடன் தர்க்கம் செய்த தம்மை அடையாளம் கண்டு தம் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவதினம் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள், தமது மீன்பிடியை இடைநடுவே கைவிட்டு, சக மீனவர்களின் உதவியுடன் கரைதிரும்பி பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பேசாலை பங்குத் தந்தை மற்றும் மீனவர் சங்கம் ஊடாக கடற்படை உயர் அதிகாரிகளுக்கு முறையிடப்பட்டும் தாக்குதல் நடத்திய கடற்படையினருக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பேசாலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் தாயகமான வட மாகாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் அப்பாவி தமிழ் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ளும் சம்பவங்கள், அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களினால், பல தடவைகள், இதுதொடர்பில் முறையிடப்பட்டும், இன்று வரை தமிழ் மீனவர்கள் மீதான கடற்படையினரின் தாக்குதல் நிறுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.