இலங்கைத்தீவில் பொருளாதார நெருக்கடி

மக்கள் இரண்டு வேளை மாத்திரம் உணவு அருந்த வேண்டுமென ரணில் கூறியமைக்குக் கடும் விமர்சனம்

வன்முறையில் எரிக்கப்பட்ட தமது வீடுகளுக்கு மொட்டுக் கட்சி நஷ்டஈடு கோரியதற்கும் கண்டனம்
பதிப்பு: 2022 ஜூன் 07 23:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 08 17:19
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பொருளாதார நெருக்கடியினால், மக்கள் இரண்டு வேளை சாப்பிடுவதற்குத் தயாராக வேண்டுமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அரசாங்கம், மக்கள் இரண்டுவேளை மாத்திரமே சாப்பிட வேண்டும் என்று கூறுவது வெட்கக் கேடானதென தொழிற்சங்க சம்மேளம் கண்டித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரணில் விக்கிரமசிங்க செவ்வாய் 07 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். இந்த உரையின் பின்னர் விவாதம் இடம்பெற்றது.
 
இந்த விவாதத்தில் பேசிய ஜே.வி.பி உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா, மக்களை ஒரு நாளைக்கு இரண்டுவேளை மாத்திரம் சாப்பிடுமாறு கட்டளையிட பிரதருக்கு உரிமை இல்லை என்று கூறினார்.

ஏற்கனவே, கடந்த இரண்டு மாதமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் இரண்டுவேளை உணவு மாத்திரமே அருந்துகின்றனர், தேநீர்கூட அருந்துவதில்லை என்றும் அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்தார்.

பிரதமரின் உரையை தொழிற்சங்க சம்மேளனம் கண்டித்துள்ளதாக ஜே.வி.பி உறுப்பினர் விஜத கேரத் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமது வீடுகள் எரிக்கப்பட்டமைக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்ததைக் கண்டித்த விஜத கேரத், பசி பட்டினியால் மக்கள் கஷ்டப்படும்போதும், எரிக்கப்பட்ட வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் நஷ்டஈடு கோருவது வெட்கம் கெட்ட செயல் என்றும் கூறினார்.