இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பதினைந்து இலட்சம் குழந்தைகளின் மருத்துவ கிளினிக் முடக்கம்

அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு- 60 இலட்சம்பேர் பாதிப்பு என்கிறார் வைத்தியர் ஜயந்த பண்டார
பதிப்பு: 2022 ஜூலை 02 21:44
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 02 23:03
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
பொருளாதார நெருக்கடி, எரிபொருட் தட்டுப்பாடுகள் காரணமாக, மருந்துகள், மருத்துவ உபகரண பற்றாக்குறை மற்றும் போசாக்கான உணவு வகைகளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக இலங்கைத்தீவில் சுமார் அறுபது இலட்சம் பேர் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் போசாக்குப் பிரச்சினைகள் போன்றவற்றால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சுமார் பதினையாயிரம் இருதய நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
 
ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 15 இலட்சம் குழந்தைகள் ஒவ்வொரு மாதமும் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதும் உள்ள கிளினிக் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். ஆனால் மருந்துத் தட்டுப்பாடுகளினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜயந்த பண்டார கூறியுள்ளாா்.

இந்த நிலையில் இலங்கைத்தீவில் உள்ள அனைத்து அரச வைத்தியாசாலைகளிலும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் முடிவடைந்துள்ளதாக அரச மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை மருத்துவர் சங்கமும் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவர் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுடன் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரண்டாம் கட்டச் சந்திப்பில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவசர சத்திர சிகிச்சைகள் மாத்திரமே இடம்பெறுவதாகவும் அரச மருத்துவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்களுக்குரிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பலருக்குச் சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அரச மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில், வெளிநோயாளர் பிரிவு செயலிழந்துள்ளதாகவும், மாதாந்த கிளினிக் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் டொலர்கள் இல்லையென சுகாதார அமைச்சு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.