கோட்டாபயவை பதவி விலகுமாறு கோரி

போராட்டம் நடத்திய இளைஞர் குழுக்களிடையே மோதல், பொலிஸார் ஒருவர் உயிரிழப்பு- அலரிமாளிகைக்குள் சம்பவம்

பத்துப்பேர் படுகாயம்- பெண் ஒருவரின் கழுத்தில் கத்திக்குத்து
பதிப்பு: 2022 ஜூலை 12 11:48
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 12 23:39
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி போராட்டம் நடத்தி வரும் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் சுமார் பத்துப்பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தார் ஒருவர் சிகிச்சை பலனின்றிப் பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பிரதமரின் அலரி மாளிகையில் தங்கியுள்ள போராட்டக்குழுக்களே மோதலில் ஈடுபட்டதாகவும் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்குழுவின் மற்றுமொரு பகுதியினருக்குமிடையே மோதல் இடம்பெற்றதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.
 
கொள்பிட்டிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தபோதும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. குமார் ரட்ணத்தின் தலைமையிலான முன்னிலை சோசலிசக் கட்சியின் இளைஞர்களே காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர்களாகச் செயற்பட்டு வந்த நிலையில், ஜே.வி.பியின் இளைஞர் அணியும் இப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற அணியே முன்னிலை சோசலிசக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி வெடித்ததிலேயே காயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நபரொருவர் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.