கோட்டாவையடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கோரி

நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டக்காரா்கள் முயற்சி- பொலிஸாருடனான் மோதலில் 45 பேர் காயம்

குழப்பங்களுக்கு மத்தியில் ரணில் பதில் ஜனாதிபதியென இலங்கை அரச வர்த்தமானி இதழ் வெளியானது
பதிப்பு: 2022 ஜூலை 13 23:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 14 23:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பில் இன்று நள்ளிரவுவரை தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்திற்கு அருகாக உள்ள சபாநாயகரின் இல்லத்தைக் கைப்பற்ற முற்பட்டபோது பெரும் மோதல் ஏற்பட்டது. சுமார் 45 பேர் காயமடைந்து கொழும்புத் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி முப்படைனரும் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்களையும் நீர்த்தாரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டபோதும், போராட்டக் குழு எதிர்த்து நின்று முன்னோக்கிச் செல்கின்றது.
 
நாடாளுமன்றத்தைப் பாதுகாக்குமாறு முப்படைகளுக்கும் பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால், அதனைத் தடுத்து நிறுத்தப் பதிலடி நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு முப்படை தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் விடுத்த கோரிக்கையை கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டாமெனவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகினால் இந்தப் போராட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் கட்சித் தலைவர்கள் முப்படைத் தளபதிகளிடமும் பொலிஸ் மா அதிகரிடமும் கேட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிரணி பிரதம கொறடாவுமான லக்மன் கிரியல்ல ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்தி இலங்கை அரச வர்த்தமானி இதழ் இரவு வெளிவந்துள்ளது.

இலங்கைத்தீவு முழுவதிலும் வியாழக்கிழமை அதிகாலை வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொழும்பில் புதன்கிழமை நள்ளிரவு வரை பதற்றம் காணப்பட்டது. கொழும்பு நகரில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவும், ராஜபக்சவின் கட்சியான பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்களும் பங்குபற்றவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் பங்குபற்றியிருந்தார்.

மக்கள் ஆணையை ஏற்று ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டுமென்பதே கட்சித் தலைவர்களின் கோரிக்கையாக இருந்தது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் சாதாரண 113 பெரும்பான்மைய இதுவரை நிரூபிக்க முடியவில்லை.

இந்த நிலையில் புதிய பிரதமர் ஒருவரை நாடாளுமன்றத்தில் நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளார். புதிய பிரதமர் நியமிக்கப்படுவது உறுதியானால் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகுவாரென ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 54 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் இருந்து விலகிச் சுயாதீனமாகச் செயற்படும் 39 உறுப்பினர்களும் மற்றும் ஜே.வி.பியின் மூன்று உறுப்பினர்களும் மாத்திரமே தற்போது இணைந்து செயற்படுகின்றனர்.

இதனால் 113 சாதாரண பெரும்பான்மையை சஜித் அணி நிரூபிக்க முடியாது.

ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் 110 உறுப்பினர்களில் பலர் தற்போது சஜித் அணியோடு இணைந்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க மறுத்துள்ளனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் எவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சஜித் அணியோடு இணைந்து சர்வகட்சி அரசாங்கம் அமைக்க மறுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் 110 உறுப்பினர்களில் வேறு பலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க விரும்பவில்லை.

இதனால் அரசாங்கத்தை அமைப்பதில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுவதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை இந்த நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இருப்பதால், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் மற்றும் பெரிய கட்சிகளின் சில உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைக்கக் கூடிய வாய்ப்புகளும் இல்லாமலில்லை.