யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான அரசியல் சூழல்

ஜனாதிபதிப் பதவிக்கு ரணிலை எதிர்த்து சஜித், டளஸ் போட்டியிட முடிவு

வேட்பு மனுத் தாக்கலின் பின்னரே யாருக்கு வாக்களிப்பதென தமிழரசுக் கட்சி அறிவிப்பு- முன்னணி மௌனம்
பதிப்பு: 2022 ஜூலை 15 23:03
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 16 22:52
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஜனாதிபதிப் பதவிக்குக் கடும் போட்டி நிலவுகின்றது. ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியான நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள வாக்கெடுப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வாக்களிக்குமென அதன் செயலாளர் சாகர காரியவன்சம் வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்திருந்தார். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் சார்பில் மூத்த உறுப்பினர் டளஸ் அழகபெருமாவை வேட்பாளராக நிறுத்தவுள்ளதாக பெரமுனக் கட்சியின் தலைவர் பேராசிரியர் பீரிஸ் வெள்ளிக்கிழமை மாலை அறிவித்திருந்தார்.
 
இதனால் பெரமுனக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டுமென பெரமுனக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

டளஸ் அழகபெருமாவை வேட்பாளராக நிறுத்தி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 50 உறுப்பினர்களின் ஆதரவுகளையும் பெற்றால் டளஸ் அழகபெரும வெற்றி பெறுவாரெனவும் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பது என்றும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. அதற்கான பேச்சுக்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையிலேதான், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை இரவு சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பெரமுனக் கட்சிக்குள் மேலும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் இருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் 39 உறுப்பினர்களும் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி யாருக்கு வாக்களிக்குமென இதுவரை எதுவுமே கூறப்படவில்லை. முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ்க் கட்சிகளும் இதுவரை எந்தவொரு முடிவுகளையும் எடுக்கவில்லையெனக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, 19 ஆம் திகதி வேட்பு மனு தாக்கலின் பின்னரே கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.