கோட்டாபய பதவி விலகிய பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசின்

ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு- நால்வர் போட்டி

கோடிக் கணக்கிலும் மில்லியன் ரூபாய்கள் பெறுமதியிலும் பணம் கைமாறுவதாகக் குற்றம் சுமத்துகிறார் மைத்திரி
பதிப்பு: 2022 ஜூலை 17 23:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 18 09:20
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் இருபதாம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு நான்கு உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜே.வி.பி என்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரே போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுயாதீன அணிகள் உட்பட மேலும் சில உறுப்பினர்கள் தமக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்ற நம்பிக்கையிலேயே சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். அரவிந்தகுமார், டயானா கமகே, ஹரின், மனுச நாணயக்கார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறிய நிலையில், ஐம்பது உறுப்பினர்களின் ஆதரவுடன் வேறு கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்த்தே சஜித் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடுகின்றார்.

டலஸ் மற்றும் அநுரவுக்கு முதல் வாக்களை வழங்கும் உறுப்பினர்கள், இரண்டாவது விருப்பு வாக்கை சஜித் பிரேமதாசாவுக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடம் காணப்படுகின்றது.

ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் மட்டுமே உள்ளது. ஆகவே ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுன, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி,டி.பி., பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளின் வாக்குகளை நம்பியே நம்பியே ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகிறார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரும் நடவடிக்கையில் வஜீர அபேவர்தன, நிமல் லான்சா, ஹரின் பெர்ணான்டோ போன்ற உறுப்பினர்கள் பலர் முழு மூச்சாகச் செயற்பட்டு வருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் இருந்து வெளியேறிய விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயாதீனமாகச் செயற்படும் முபத்து ஒன்பது உறுப்பினர்களும் டளஸ் அழகப்பெருமாவுக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும்.

இதுவரையும் அவர்கள் எந்தவொரு கருத்துக்களையும் கூறவில்லை.

ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனக் கட்சியில் அதன் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான ஒரு குழு, டளஸ் அpகபெருமாவுக்கும் பெரமுனவின் செயலாளர் காசர காரியவன்சத்தின் தலைமையிலான மற்றொரு குழு, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக முடிவெடுத்துள்ளனர். இதனால் பெரமுனக் கட்சிக்குள் பிளவுகள் அதிகரித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதின் நான்கு உறுப்பினர்களில் நான்குபேர் அரசாங்கத்தின் பக்கம் உள்ளனர். நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, சாந்த பண்டார, சுரேன் ராகவன் ஆகிய நால்வருமே அரசாங்கத்தின் பக்கம் இருப்பதால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

அதேவேளை, யாருக்கு வாக்களிப்பதென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்குமென அதன் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே கூறியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்கவுள்ளதக் கூறப்படுகின்றது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் யாருக்கு வாக்களிப்பதென இதுவரை கூறவில்லை.

அதேவேளை, வாக்களிக்குமாறு கோரி கோடிக் கணக்கிலும் மில்லியன் ரூபாய்கள் பெறுமதியிலும் பெருமளவு பணம் உறுப்பினர்களிடையே கைமாறுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன கூறுகிறார்.

இந்தப் பணம் எங்கிருந்து வருகின்றது எனத் தெரியவில்லை எனவும், இதனால் போட்டியைத் தவிர்க்குமாறும் மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார்.

கொழும்பு மருதானையில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நூற்றி நாற்பது வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவது உறுதியென வஜீர அபேவர்த்தன கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.