யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான அரசியல் சூழல்

போராட்டக்குழுக்கள் மீதான தாக்குதல்- நாடாளுமன்றத்தில் விவாதம்

கோட்டாபயவின் செயலாளர் காமினி செனரத், ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பதவியேற்பார்
பதிப்பு: 2022 ஜூலை 24 23:06
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 26 16:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு நடத்தப்பட்ட போராட்டங்கள் அதன் பின்னர் தொடரும் போராட்டங்கள் மற்றும் கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களத்தில் இருந்து போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறும் நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும் எதிர்க்கட்சிப் பிரதான அமைப்பாளரான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
ஆனாலும் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக விளக்கமளித்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன, எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்காக 27 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, இந்த விவாதத்தை நடத்தலாம் எனவும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன லக்ஸ்மன் கிரியெல்லவிடம் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டகாரர்களைத் தாக்கிக் கலைத்தமை சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கை என்பதால், அது தொடர்பாக விவாதம் நடத்தப்படுவது முக்கியமானதென லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் வன்முறையையே விரும்பினார்கள் அதனால்தான் அவர்களை ஜனாதிபதி மாளிகை வளாகப் பிரதேசத்தில் இருந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் அகற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமராகப் பதவியேற்ற போதும், அதற்கு முன்னரும் காலிமுகத்திடல் போராட்டத்தை ஆதரித்திருந்ததாகவும், போராட்டக்குழு தன்னை வந்து சந்தித்து உரையாடியிருந்ததாகவும், ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றவேளை அமைச்சா்களுடன் இடம்பெற்ற உரையாடல்களின்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் செயலாளராக் கடமையாற்றிய கமினி செனரத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்வரும் நாட்களில் நியமனக் கடிதத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவாரெனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, 27 ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் இருபத்து இரண்டாவது நகல் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படுமென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.