வடமாகாணம்

மன்னாருக்குத் தமிழகத்தில் இருந்து பொருட்கள் கடத்தல்

தலைமன்னார் பொலிஸார் விசாரணை
பதிப்பு: 2022 ஜூலை 31 07:55
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 03 19:31
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள் உள்ளூர் மற்றும் இந்தியக் கடத்தல் நடவடிக்கைகளுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து சூசகமாகப் பல வகையான பொருட்கள் சட்டவிரோதமாக மன்னார் கரையோர பகுதிகளுக்கு தினமும் எடுத்து வரப்படுவதாக தலைமன்னார் பொலிஸார் கூறுகின்றனர். இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தமிழர் தாயகமான மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடித்தொழில் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
 
இதன் காரணமாக மன்னார் உட்பட வட மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் பல வாரங்களாக கடற்றொழிலுக்கு செல்லவில்லை என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் செயலாளர் நூர் முகம்மட் ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

கடும் பண நெருக்கடிக்கும், பொருளாதார கஷ்டத்திற்கும் முகம் கொடுத்துள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் அன்றாட உணவுக்கே அல்லல்படும் துன்ப நிலையை அடைந்துள்ளதாக நூர் முகம்மட் ஆலம் தெரிவித்தார்.

இத்தகைய நிலையில் தற்போதைய நாட்டு நிலவரம் காரணமாக மீனவர்கள் மட்டுமின்றி, மன்னார் மாவட்டத்தில் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், விவசாய கூலிகள், சிறு கைத்தொழிலாளர்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வாகனச் சாரதிகள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் தமது தொழிலை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் பலர் தமது வாழ்வாதாரத்திற்கான தொழில் வாய்ப்பை இழந்துள்ளதை சாதகமாக பயன்படுத்தும் பெரும் பணம் படைத்த கடத்தல் வியாபாரிகள், மன்னாருக்கும் தமிழகத்திற்கு இடையிலான தமது கடல் வழிக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு, மன்னார் மாவட்டத்தில் தொழில் இன்றி வறுமையுடன் போராடி வரும், ஒரு சில இளைஞர்களை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடத்தல் நடவடிக்கைகளுக்கு, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மிகச் சொற்ப எண்ணிக்கையிலான மீனவர்கள் உதவியாளர்களாகவும், படகோட்டிகளாகவும் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிக அளவான வேதனம் வழங்கப்படுவதாகவும், கடத்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதில் ஈடுபட்டவர்களுக்கும், ஒத்தாசை வழங்கியவர்களுக்கும் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்படுவதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக் காலங்களாக மன்னார் மாவட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து ஹெரோயின், ஐஸ், கஞ்சா ஆகியன கடத்திவரப்பட்டு தென்னிலங்கைக்கு இரகசியமாக அனுப்பிவைக்கப்படும் நிலையில், தற்போது மன்னாரை தளமாகக் கொண்டு இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் போதைவஸ்து பொருட்களுடன் வேறு பொருட்களும் கடல் வழியாகக் கடத்தப்படுவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வலி நிவாரண மாத்திரைகள், ஆயுர்வேத மருந்துகள், உடல் வலு சத்து பானங்கள், சிறுநீரக நோயாளர்களுக்கான ஊசி மருந்துகள், மன நோயாளிகள் பயன்படுத்தும் தூக்க மாத்திரைகள், போதைமருந்து கலந்த குளிகை வகைகள், தங்க ஆபரணங்கள், தங்க பிஸ்கட்கள், போதையூட்டப்பட்ட பாக்கு வகைகள், பீடி இலைகள்,விவசாயப் பசளை வகைகள், களை நாசினிகள், கிருமி நாசினிகள், உலர்த்தப்பட்ட மஞ்சல் கட்டிகள், உலர்த்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடல் சங்குகள், சமையலுக்கு தேவையான மசாலாப் பொருட்கள், ஏலம், கருவா போன்ற வாசனைத் திரவியங்கள், தைக்கப்பட்ட ஆடை அணிகள், கையடக்கத் தொலைப்பேசிகள், வாகன உதிரிப்பாகங்கள் ஆகியன கடல் வழியாக படகுகள் மூலம் மன்னார் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களை மையப்படுத்தி தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கடத்தப்படுவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும் கடத்தல் புள்ளிகள் தமது கடத்தல் தொழிலை மன்னாரைச் சேர்ந்த சில மீனவர்கள், படகோட்டிகள், மற்றும் ஒரு சில இளைஞர்களின் உதவியுடன் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதாகத் கூறப்படுகிறது.

இது இவ்விதம் இருக்க மன்னார் பேசாலை கடற்பரப்பில் கடந்த 25ஆம் திகதி இரவு விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் தங்கப்பாளங்கள் மற்றும் வலம்புரி சங்கு ஆகியவற்றை கடல் வழியாக தமிழகத்திற்கு கடத்திச்சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்றைய தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மூவருடன், அவர்கள் பயணித்த படகு உட்பட அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கப்பாளம் மற்றும் வலம்புரி சங்கு ஆகியன யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அலுவலகத்தில் இலங்கை கடற்படையினரால் கடந்த திங்களன்று ஒப்படைக்கப் பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தாம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு அருகாமையில் உள்ள இரண்டாம் தீடை கடல் பகுதியில் கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட கஞ்சாபொதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அத்துடன் செவ்வாய்க்கிழமை மாலை தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இலங்கைக்கு செல்வதற்கு தயாராக இருந்த படகொன்றினை கைப்பற்றிய இந்திய பொலிஸார், குறித்த படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி "ப்ரீகபலின்" எனும் வலிப்பு நோய்கான மருந்து வகைகளை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்ட கரையோரப்பகுதிகள் ஊடாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறும் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்கத்திணைக்களம் அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.