இலங்கைத்தீவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருகை தரவுள்ள

சீனக் கப்பல் குறித்து எதுவும் தெரியாதென்கிறார் இலங்கைக் கடற்படைப் பேச்சாளர்

இந்தியாவின் அதிருப்தி தொடர்பாக உயர்மட்டத் தீர்வைக் காண வேண்டுமென்கிறார் ஹர்சா
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 01 08:58
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 02 14:03
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவின் தென்மாகாணம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் யுவான் வாங் ஐந்து எனப்படும் சீன விஞ்ஞான ஆய்வு கப்பல் தொடர்பாக இலங்கைக் கடற்படைக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனக் கப்பல் விவகாரம் தொடா்பாகத் தனக்கு போதுமான தகவல்கள் தெரியாதென இலங்கைக் கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான வீரகேசரிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பதினொராம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன கப்பல், பதினேழாம் திகதி வரை அங்கு நங்கூரமிட்டிருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா இவ்வாறு கூறியுள்ளார்.
 
குறித்த சீன கப்பலின் வருகையானது தற்போது நாட்டில் புதிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. இந்த கப்பலின் இலங்கை வருகை தொடர்பாகத் தாம் முன்னரே அறிந்திருந்ததாக இந்தியா அறிவித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இந்தியா, குறித்த கப்பலின் வருகைக்கான காரணம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் என்பன தொடர்பாக முழுமையான தெளிவுப்படுத்தலை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் இந்த கப்பலின் வருகை நேரடியாகவே தாக்கம் செலுத்துவதால் இந்த விடயத்தில் முழுமையான அவதானத்துடன் இருப்பதாக கொழும்பிற்கு புதுடில்லி உயர் மட்டம் தகவல் அனுப்பியுள்ளது. சீன கப்பல் தொடர்பில் இந்தியா அதிருப்தி வெளியிட்டதையடுத்து, தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தவிர்க்கும் என்று தாம் நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த கப்பலின் வருகைக்கான அனுமதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு , பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை என்பவற்றிடம் பெற்றுக் கொள்ளப்படும் என்று கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா கூறியிருக்கிறார்.

ஆனாலும் தனக்கு இதுகுறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் தெரியாது. இந்த கப்பலின் வருகைக்கும் இலங்கை கடற்படைக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்த தகவல்களை சேகரித்து, அதனை வழங்க முடியும் என்று கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா மேலும் கூறியிருக்கிறார்.

இதேவேளை, சீன கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருகை தருவது குறித்துக் கவனம் செலுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

யுவான் வாங் ஐந்து என்ற கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளமை தொடா்பாக இந்தியா கேட்டபோதும், இலங்கையின் உயா்மட்டப் பாதுகாப்புத் தரப்புகள் உரிய பதில் வழங்க மறுத்துள்ளதாகவும், சீனக் கப்பலின் வருகையைத் தடுத்து நிறுத்த முடியாதென இலங்கை இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளது என்றும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை. சீனக் கப்பல் விவகாரம் கைமீறிச் செல்வதற்கு முன்னர், இந்தியாவின் அதிருப்தி தொடர்பாக, இலங்கை அரசாங்கம் உயர்மட்டத் தீர்வைக் காண வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்சா டி சில்வா சமூகவலைத்தளத்தில் பதிவிவிட்டுள்ளாார்.

சீனக் கப்பல் விவகாரம் தொடர்பாக இந்தியா அதிருப்தியை வெளியிட்டுள்ளது என்ற செய்தியை மேற்கோள்காண்பித்தே ஹர்சா டி சில்வா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் உதவிகள் இலங்கைக்குத் தேவைப்படும் தருணத்தில் இவ்வாறான முரண்பாடுகளை இலங்கை தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் ஹர்சா டி சில்வா தனது பதிவில் கேட்டுள்ளார்.