யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான அரசியல் சூழல்-

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து ரணில் கடும் முயற்சி

வெள்ளிக்கிழமை சஜித் பிரேமதாசாவுடன் சந்திப்பு- தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் பேசவுள்ளார்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 02 22:06
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 03 22:05
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார். அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்துவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய குழு செவ்வாய்க்கிழமை மாலை கூடி ஆராய்ந்துள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கெடுப்பதைவிட, பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில் சர்வகட்சிச் செயற்பாட்டில் மாத்திரம் ஈடுபடுவதென ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இத் தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் அறிவித்துள்ளார். இந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை சந்திப்பதென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய முடியாதெனவும், சர்வகட்சிச் செயற்பாடு மாத்திரமே முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்சா டி சில்வா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார். அதன் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமெனக் கையொப்பமிட்டுக் கடிதம் ஒன்றைச் சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்கவுக்குச் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளார.

இந்த நிலையிலேயே புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திப்பை உறுதிப்படுத்தவில்லை.