இலங்கை ஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் முயற்சி

சர்வகட்சி நிர்வாக ஆட்சி முறைக்கு ரணில் இணக்கம்

சஜித் அணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்- விக்னேஸ்வரனும் சந்திக்கத் திட்டம்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 06 22:11
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 07 13:05
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
சர்வகட்சி நிர்வாக ஆட்சி முறைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களைச் சந்தித்த போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை அமுல்படுத்துவதில் பிரச்சினையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆட்சிமுறைக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தியிடம் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
 
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை முன்வைத்தார்.

இலங்கை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

அமைச்சு பதவிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைக்கு தீர்வை முன்வைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளார்.

சர்வகட்சி நிர்வாக ஆட்சி முறை ஒன்றை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ரணில் விக்கிரமசிங்க. ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளையும் சந்தித்துள்ளார். ஆனால் ஆதரவு வழங்க முடியாதென ஜே.வி.பி கூறியுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாகக் கூறிவில்லை. ஆனாலும் தேசிய வேலைத் திட்டங்களின் அடிப்படையில் ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியுமென கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் பற்றிய பரிந்துரைகளையும் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதில் பயனில்லை என நேரடியாகக் கூறியுள்ளது. சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறைக்கு ஆதரவு வழங்க முடியாதெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எந்தவொரு முடிவுகளையும் அறிவிக்கவில்லை. இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க உள்ளதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை சந்திப்பு இடம்பெறவுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.