இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரம்

தேசிய அரசாங்கம் அமைக்க ரணில் முடிவு- மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் பெற ஏற்பாடு

சஜித் அணியில் இருந்தும் உறுப்பினர்கள் பலர் தனிப்பட்ட முறையில் ஆதரவு வழங்குவர்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 18 08:29
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 21 00:13
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஐக்கிய மக்கள் சக்தியையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவும் நோக்கமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. சர்வகட்சி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைப்பதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் இடமில்லையென இலங்கைச் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன் தேசிய அரசாங்கம் பற்றியே சட்டத்தரணிகள் சங்கமும் வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களையும் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து உறுப்பினர்கள் பலரை உள்வாங்கித் தேசிய அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடியாதென சஜித் பிரேமதாச கூறி வந்த நிலையில், அவருடைய கட்சியில் இருந்து இருபதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளனர்.

கட்சிகளாக அல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக இணைந்து கொள்ள விரும்பம் வெளியிட்டுள்ளதால் சாதாரண 113 பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியுமென ரணில் விக்கிரமசிங்க மூத்த அமைச்சர்கள் சிலரிடம் கூறியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைவதை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக அரசாங்கத்தில் இணைந்து கொள்வதால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதே பொருத்தமானது என அரசியல் கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துக்கூறியுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை முப்பதிலிருந்து நாற்பத்தி இரண்டாக அதிகரிக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்து வரும் புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனவும் கூறப்படுகின்றது.