இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள்
பதிப்பு: 2022 செப். 02 22:10
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 06 19:06
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நூற்றுப் பதினைந்து வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்ற ஓகஸ்ட் மாதம் முப்பதாம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. முப்பத்து ஒராம் திகதி ஆரம்பித்த விவாதம் வெள்ளிக்கிழமை இரண்டாம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் பெறப்பட்டன.
 
வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறிய டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேரடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் பங்கேற்றிருக்கவில்லை.

ஜே.வி.பி எதிராக வாக்களித்தது. தொடர்ந்து வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைப் பிரதான எதிர்க்கட்சிகள் மூன்று நாள் விவாதத்தின்போதும் காரசாரமாக விமர்சித்திருந்தன.

ராஜபக்சக்களுக்கு ஆதரவான முறையில் செயற்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று குற்றம் சுமத்திய சஜித் அணி உறுப்பினர் ஹர்சா டி சில்வா சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் இலங்கைக்கு ஆபத்தானது என்றார்.

இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியுதவி போதாது என்றும், ஏமாற்று வேலை எனவும் கூறிய அவர், இந்த அரசாங்கம் ராஜபக்சக்களின் ஆதரவுடன் இருப்பதாலேயே சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்கத் தயங்குவதாகவும் ஹர்சா டி சில்வா கூறினார்.