தொடரும் பொருளாதார நெருக்கடி

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடன் இந்தியத் தூதுவா் உரையாடல்

கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார உதவிகள் குறித்து இருவரும் விவாதித்தனர்
பதிப்பு: 2022 செப். 23 14:31
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 23 19:29
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைக்குப் பொருத்தமான கடன் வசதிகள் மற்றும் பொருட்கள் நன்கொடை செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்தியாவுடன் இலங்கை கலந்துரையாடியுள்ளது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து முன்மொழியப்பட்ட கூட்டு வேலைத் திட்டங்கள் மற்றும் நோக்கங்களை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்த்தன, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். பிரதமரின் அலரி மாளிகையில் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் எல்டோஸ் மேத்யூஸ் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். குறிப்பாக இலங்கைக்கு வழங்கிய கடன் மறுசீரமைப்புக் குறித்தே விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
 
பிரதமர் தினேஷ் குணவர்தன இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகள், ஒத்துழைப்புக் குறித்து விரிவாக எடுத்துக் கூறியதாகப் பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.

சந்திப்பின்போது, கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுபடுத்தல், நிவாரணப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக இந்தியத் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியா வழங்கிய உதவிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன நன்றி தெரிவித்தார்.

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், புகையிரதங்களின் கூட்டுத் திட்டங்கள், விவசாயம் மற்றும் மீன்பிடி அபிவிருத்திக்கான உதவிகள் உட்பட எரிசக்தி துறையில் அதிக இந்திய முதலீடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்துச் சந்திப்பில் இருவரும் விவாதித்ததாகவும் அலரிமாளிகைத் தகவல்கள் கூறுகின்றன.

அவசியமான சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை இலங்கை பெறுவதற்குரிய வசதிகளை இந்தியா வழங்கியமைக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.