ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை அமர்வில்

இலங்கை தொடர்பான ஜெனீவாத் தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் இந்தியா விலகியது

சீனா, பாகிஸ்தான் ஆதரவாக வாக்களிப்பு
பதிப்பு: 2022 ஒக். 06 22:48
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 06 23:26
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை அமா்வில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வருடங்களைப் போன்று இந்த வருடமும் இந்தியா வாக்கெப்பில் இருந்து விலகிக் கொண்டது. ஆதரவாக இருபது நாடுகளும், எதிராக ஏழு நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட இருபது நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டன. ஆனால் ஏனைய அயல்நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு எதிர்த்து வாக்களித்தன.
 
கடந்த மாதம் பன்னிரெண்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைச் சபை அமர்வில் இலங்கையின் சமகால நிலைமைகள் மற்றும் கடந்த தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றாமை தொடர்பாக விரிவான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

அதேவேளை. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயங்களும் இலங்கையைக் கட்டுப்படுத்தாது என்று கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு இன்றிரவு தெரிவித்துள்ளது.

தீர்மானம் தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டு இலங்கையின் அரசியல் யாப்புக்கு முரணாக இருக்கும் பகுதிகள் நிராகரிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

அதேவேளை, இனப்பிரச்சினை 2015 இல் இருந்து நல்லிணக்கமாகவும் வடமாகாணப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டது. 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கான பாதுகாப்பு விவகாரமாகவும் பேசப்படுகின்றது.

2022 இல் பொருளாதார நெருக்கடிப் போராட்டத்துடன் இலங்கையின் பொருளாதாரக் குற்றங்கள், இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு என்று திரிபுபடுத்தப்பட்டுத் தற்போது ஈழத்தமிழர்கள் விவகாரம் என்பது பத்தோடு பதினோராவது பிரச்சினையாகக் கீழ் இறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அதுவும் மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் பதவி விலகியுள்ள நிலையில், இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.