வடமாகாண

கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் குற்றம் சுமத்துகிறார் விமல்

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட ரணில் முற்படுவதாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2022 நவ. 01 09:24
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 02 16:01
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
தமிழர் தாயகமான வடக்கு மாகாணக் கடற்பரப்பில் ஈழத் தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் மோதிக்கொள்ளும் சூழலின் பின்னணியில் இந்திய - இலங்கைக் கடற்படை திட்டமிட்டு செயற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலோசனையின் பிரகாரம் வடக்கு கடற்பகுதி முழுவதையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டு பின்னர் முரண்பட்டுத் தனித்துச் செயற்பட்டு வரும் விமல் வீரவன்ச, தமிழக மீனவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
 
கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இலங்கைக் கடற்பரப்பைத் தமிழக மீனவர்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதனால் இலங்கைத்தீவின் இறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கையின் இறைமை மக்களிடமே காணப்படுகிறது. ஆனால், இலங்கையின் சுயாதீனத்தை இலங்கை முப்படையினரே பாதுகாக்க வேண்டும். ஆனால் வடக்குக் கடல் பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டாமென கடற் படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்பகுதியை மீட்டுத் தருமாறு மீனவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையின் பேரிலேயே தமிழ்நாட்டு மீனவர்கள் வடக்குக் கடற் பகுதியை கொள்ளையடிக்க இடமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடல் வளத்தை மற்றொரு நாட்டின் மீனவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கப்பட்டு இலங்கையின் சுயாதீனத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இல்லாதொழிப்பதாகவும் விமல் வீரவன்ச கூறினார்.

பொருளாதார நெருக்கடியைக் காரணம்கூறி இலங்கையின் சுயாதீனம் தன்னாதிக்கம் ஆகியவற்றை ரணில் விக்கிரமசிங்க இல்லாதொழித்து வருகிறார். 2016 இல் அமெரிக்காவுடன் கைச்சாத்திட முடியாமல்போன மிலேனியம் சிற்றி கூட்டு ஒப்பந்தத்தையும் மீண்டும் வேறொரு பெயரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ளது.

2016 ஆம் ஆண்டு மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட இந்தியாவுடனான எட்கா எனப்படும் தொழில் நுட்ப பொருளாதார ஒப்பந்தத்தையும் அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளதாகவும் விமல் வீரவவன்ச கூறினார்.