இலங்கைத்தீவில் 2019 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் விடுதலை

கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு - கொழும்பு பேராயர் இல்லம் மௌனம்
பதிப்பு: 2022 நவ. 02 08:57
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 03 22:33
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் 2019 ஆம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பான அனைத்துக் குற்றச் சாட்டுக்களில் இருந்தும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களின் பிரதான சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதற்கான கட்டளையை கோட்டை நீதவான் திலிண கமகே, இன்று புதன்கிழமை பிறப்பித்தார்.
 
இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதே ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார் ரிஷாட் பதியூதீனைக் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி கைது செய்திருந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குவின் விசாரணை அறிக்கையைப் பகிரங்கப்படுத்துமாறு கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் பகிரங்மாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இலங்கை நீதித்துறையின் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்றும் பேராயர் குற்றம் சுமத்தியிருந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இடம்பெற்ற அமர்விலும் பங்குபற்றிச் சர்வதேச நீதி விசாரணை வேண்டுமெனக் கோரினார்.

குற்றவாளிகளை அரசாங்கம் காப்பாற்றுவதாகவும், குற்றவாளிகள் பலர் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் வேறு உயர் பதவிகள் வகிப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்த பேராயர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்றும் கூறினார்.

குறிப்பிட்ட சிலர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று பேராயர் நேரடியாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக பேராயர் இதுவரை எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை.