வடமாகாணம்

மன்னாரில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

57820 ஏக்கர் விஸ்தீரணத்தில் மேற்கொள்ளத் திட்டம் என்கிறார் ஆணையாளர்
பதிப்பு: 2022 நவ. 03 22:52
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 04 23:09
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தமிழர் பகுதியான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்செய்கை சுமார் 57820 ஏக்கர் விஸ்தீரணத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மேலும் தற்பொழுது பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட விவசாயிகள் பெரும்போக நெற்செய்கைகளுக்காக உழவு பணிகளை ஆரம்பித்துள்ளதாக அன்டனி மரின்குமார் மேலும் தெரிவித்தார்.
 
இவ்வருடம் மன்னார் மாவட்டத்தில் 57820 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படவுள்ள பெரும் போக விவசாய செய்கையில் முருங்கன் கட்டுக்கரைக்குளம் நீர்ப்பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே 31 ஆயிரத்தி 339 ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கட்டுக்கரைக்குளத்தில் இருந்து வயல் நிலங்களுக்கு நீர் விநியோகிக்கும் வகையில் மன்னார் உயிர்த்தராசன்குளம் 12ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள துருசு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் கடந்த 21ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அன்டனி மரின்குமார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் செயற்படும் 13 கமநல கேந்திர நிலையங்கள் ஊடாக பெரும்போக நெற் செய்கைகளுக்கான முதற் கட்ட உர விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், குறித்த கமநல கேந்திர நிலையங்கள் ஊடாக விவசாயிகள் தமக்கு தேவையான யூரியா உரங்களை பெற்று வருவதாகவும் மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 2021 வருடம் சுமார் 53866 ஏக்கர் பரப்பளவில் பெரும் போக நெற்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உத்தரவின் பேரில் இலங்கைக்கு இரசாயன உரங்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது. அத்துடன் இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டனர்.

இதனடிப்படையில் மன்னார் மாவட்ட விவசாயிகள் கடந்த வருடப் பெரும் போக நெற்செய்கையில் போதிய விளைச்சல் இன்றி முன்னொருபோதும் இல்லாத வகையில் பெரும் நஷ்டத்திற்கு முகம் கொடுத்தனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்செய்கைகள் உரிய பசளைகள் கிடைக்கப் பெறாததால் இடைநடுவே கைவிடப்பட்டது. மேலும் இலங்கை அரசின் இறக்குமதி தடையினால் விவசாய நடவடிக்கைகளுக்கான கிருமி நாசினி, களை நாசினி, பீடை நாசினி ஆகியவற்றுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் ஒவ்வொரு பெரும் போக அறுவடையின் போதும் ஏக்கர் ஒன்றிற்கு சுமார் 40 மூடைகள் நெல் விளைச்சலைப் பெற்று லாபம் அடைந்த மன்னார் விவசாயிகள், கடந்த 2021-2022 ஆண்டு பெரும் போக நெல் அறுவடையின் பொது பதினைந்து மூடைகளுக்கும் குறைந்த நெல் விளைச்சலை மட்டுமே அறுவடையாகப் பெற்று வரலாற்றில் இல்லாத பெரும் நஷ்டத்திற்கு முகம் கொடுத்தனர்.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் இவ்வருட பெரும் போக நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் உட்பட நெற்செய்கைக்கு தேவையான வளமாக்கிகள் மற்றும் கிருமிநாசினகளை விவசாயிகள் தாரளமாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மன்னார் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.