போரினால் பாதிக்கப்பட்ட

வடபகுதியில் நீரிழிவு நோய்த் தாக்கம் அதிகரிப்பு

யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் அரவிந்தன் எச்சரிக்கை
பதிப்பு: 2022 நவ. 04 22:32
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 04 23:25
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு நோய் விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நோய் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பதினைந்து வீதமானோருக்கு நீரிழிவு நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்தார்.

இந்த நோயின் தாக்கம் குறித்து யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் விளக்கமளித்த அவர், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வடபகுதியில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடியுமெனவும் கூறினார்.

கடந்த மூன்று வருடங்களில் இந்த நோயின் தாக்கம் குறைவடையவில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாணத்தில் முப்பது சதவீதமானோருக்கு நீரிழிவு நோய்த் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாகவே காணப்படுகின்றது.

இலங்கைத்தீவில் நீரிழிவு நோய் பற்றிய ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகள் மூலம் இந்த நோயின் தாக்கம் தீவின் அனைத்துப் பிரதேசங்களிலும் சிறிது சிறிதாக அதிகரித்து வருவதைக் காண முடிகின்றது.

வளர்முக நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகும். அதுவும் இலங்கை போன்ற வறுமை நாடுகளில்தான் இந்த நோய் கூடுதலாக அதிகரித்து வருகின்றது. ஆனால் வடபகுதியில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளன.

இது ஆரோக்கியமான நிலை அல்ல. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் சமூக நல நிறுனங்களினால் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு விழிப்புணர்வு வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே உலக நீரிழிவு விழிப்புணர்வு வாரத்தில் யாழ்ப்பாணத்தில் பல விழிப்புணர்வுத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

மாணவர்கள் மத்தியிலேயே கூடுதலான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இளைஞர் - யுவதிகள் மத்தியில் மாறுபட்டுள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் இந்த நோயின் தாக்கத்துக்கான காரணிகளின் பிரதானமாகவுள்ளது.

மன அழுத்தங்கள், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் காணப்படும் வேலைப் பளுக்கள், நித்திரைக்குறைவு போன்றவையும் இந்த நோயின் தாக்கத்துக்குக் காரணம் என்று அவர் விளக்கமளித்தார்.

இது ஒரு பாரிய நோயாகும். இந்த நோய் உலகத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மக்கள் உணவுப் பழக்கங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் சுய கட்டுப்பாடுகளைப் பின்னபற்ற வேண்டுமென வைத்திய நிபுணர் அரவிந்தன் அறிவுரை கூறினார்.