பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு விவகாரங்கள்-

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகளைப் பெறுவதில் சிக்கல்- தொடர்ந்தும் உரையாடல்

ஊழியர்மட்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பதிப்பு: 2022 நவ. 09 21:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 10 13:32
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தொடர்ந்தும் பேச்சு நடத்துவதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள நிபந்தனைகள் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளதாகவும் ஆனாலும் சில நிபந்தனைகளை நிறைவேற்றக் கால அவகாசம் தேவையெனவும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியுள்ள நிலையில், நிபந்தனைகளை அரசியலாக்க வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தனர்.
 
ஆனாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்பாகச் சந்தேகங்களை எழுப்பியுள்ள ஜே.வி.பி. அரச ஊழியர்கள் தொடர்பான நிபந்தனைகள், பரிந்துரைகள் போன்றவற்றைப் பகிரங்கப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஊழியர் மட்ட ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி கோரியிருந்தது.

ஆனால் அது ஊழியர் மட்ட ஒப்பந்தம் என்றும் இன்னமும் அரச மட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை எனவும் அதன் பின்னரே ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

பல இலட்சம் அரச ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குதல் அல்லது சம்பளமற்ற விடுமுறை வழங்குதல், அரச நிறுவனங்கள் பலவற்றைத் தனியார் மயப்படுத்தல் போன்றவை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் பிரதானமான பரிந்துரை என்பது குறிப்பிடத்தக்கது.