வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பின்னர்

ரணில் அரசாங்கத்தில் சஜித் அணி உறுப்பினர் ராஜித சேனரட்ன இணைவார்

அமைச்சுப் பதவி தொடர்பாகவும் பேச்சு
பதிப்பு: 2022 நவ. 19 09:38
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 21 23:39
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ராஜித சேனரட்ன. சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்பட்டிருந்தார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படவுள்ளது.
 
வரவுசெலவுத் திட்ட விவாதம் நிறைவடைந்த பின்னர் ராஜித சேனரட்ன அரசாங்கத்துடன் இணைவார் என உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் சுகாதார அமைச்சுப் பொறுப்பை ராஜித சேனரட்ன கேட்பதாகவும், தற்போது சுகாதார அமைச்சராகப் பதவி வகிக்கும் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர் கெகலிய ரம்புக்வெல, அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை எனவும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சுகாதார அமைச்சர் பதவியைத் தமது கட்சி வைத்திருக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைவது மேலும் தாமதமாகி வருவதாகவும், அவர் அரசாங்கத்துடன் இணைந்தால் அவருக்கு வேறு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பாகத் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் ராஜித சேனரட்ன அரசாங்கத்தில் இணைவது உறுதியென ஐக்கிய தேசியக் கட்சி தொிவித்துள்ளது.