பொருளாதார நெருக்கடியைக் குறைக்க

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு- இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறுகிறார்

சீனா இலவசமாக வழங்கிய பத்துத் தசம் ஆறு மில்லியன் லீற்றர் டீசலுடன் கப்பல் கொழும்புக்கு வருகை
பதிப்பு: 2022 நவ. 25 20:03
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 27 12:15
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கைக்குக் கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சாதகமாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியம் வழங்கவுள்ள கடன் தொகை தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்புக் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் ஆளுநர் கூறினார். இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மார்ச் மாதமே கைச்சாத்திடப்படுமென எதிர்க்கட்சிகள் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கூறுகின்ற தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்றும் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்ட நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படைகள் குறித்துச் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு உரிய முன்மொழிவைச் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அளுநர் கூறினார்.

ஏற்கனவே செய்யப்பட்ட இலங்கை அரச ஊழியர்மட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கம் முழுமையான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் என்றும் ஆளுநர் கொழும்பில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

இதேவேளை, சீன அரசு நன்கொடையாக வழங்கிய டீசல் சரக்குகளை ஏற்றிய ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து கொழும்புத் துறைமுகத்துக்கு நாளை சனிக்கிழமை வந்தடையும் என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

கப்பலில் இருந்து பத்துத் தசம் ஆறு மில்லியன் லீற்றர் (9,000 மெட்ரிக் தொன்) டீசல் கொண்டு வரப்படுவதாகத் தூதரகத்தின் ரூவிற்றர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் சீன அரசு இந்த டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சு மற்றும் நிதியமைச்சு சீன அரசுக்கு இலங்கை அரசாங்கத்தின் நன்றியைத் தெரிவித்துள்ளது.