பொருளாதார நெருக்கடியை மேலும் குறைக்க

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கியிடம் இருந்து கடன்களைப் பெற இலங்கை கடும் முயற்சி

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கத்தையும் எதிர்பார்க்கின்றனர்
பதிப்பு: 2022 நவ. 30 21:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 02 00:26
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பொருளாதார நெருக்கடியை மேலும் குறைக்கச் சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியவற்றுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருகின்றது. அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த நிதியுதவியைப் பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளுடனான மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து எதிர்வரும் ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
 
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரச ஊழியர் மட்டத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இரண்டு தசம் ஒன்பது பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதென இணக்கம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்தவுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட இலங்கைக்குக் கடன் வழங்கும் தரப்புகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலம் மேலும் கடன்களைப் பெற முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கொள்கையளவில் இணக்கத்தால் ஏற்படும் கடன்கள் மூலம் இலங்கைக்கு எழுநூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜப்பான் இலகுக் கடன் நிதியுதவி ஒன்றை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இலங்கைக்குக் ஐம்பத்து இரண்டு பில்லியன் டொலர் கடன் உள்ளது.

அதில் 26 பில்லியன்கள் சீனாவுக்குத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதென அரசாங்கம் கூறுகின்றது. இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனா இதுவரையும் விட்டுக் கொடுக்கவில்லை என்றே சர்வதேச நாயண நிதியத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் கடன் மறுசீரமைப்புக்குச் சீன இணங்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் திங்கட்கிழமை அறிவித்திருந்தது. ஆனால் சீனா இணங்கவில்லை என்றும் எதிர்வரும் மார்ச் மாதம் அளவிலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் முழுமையான ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன