வடமாகாணம்

மன்னார் பள்ளிமுனை காணி அபகரிப்பு வழக்கின் தீர்ப்பு ஜனவரியில்

இலங்கைக் கடற்படையினர் மீது குற்றம் பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் மனுத் தாக்கல்
பதிப்பு: 2022 டிச. 03 19:36
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 05 21:38
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கையின் தமிழர் பகுதியான மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை மேற்கு பகுதி மக்களால் கடற்படையினருக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் கூர்மைச் செய்தி தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் பள்ளிமுனையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவர்களின் காணிகளை, இலங்கை கடற்படையினர் ஆக்கிரமித்து தற்பொழுது தொடர்ந்தும் அங்கு நிலை கொண்டுள்ளனர். இந்தநிலையில் கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் வீடுகளையும் காணிகளையும் இழந்தவர்களில் இருபத்து நான்கு உரிமையாளர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் கடற்படையினருக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
 
பள்ளிமுனையில் கடற்படையினரின் ஆக்கிரமிப்பால், தமது வீடுகளையும் காணிகளையும் இழந்த தமிழ் குடும்பங்களினால் கடந்த 2013 பெப்ரவரி மாதம் பதின்மூன்றாம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளின் விசாரணைகள், கடந்த ஒன்பது வருடங்களாக மன்னார் மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளின் போது பள்ளிமுனையில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ள காணிகள் மற்றும் வீடுகளில் இருந்து கடற்படையினர் வெளியேறி, தமது காணிகளும், வீடுகளும் தம்மிடம் மீளக்கையளிக்கப்படல் வேண்டும் என தமது சட்டத்தரணிகள் ஊடாக பள்ளிமுனை மக்கள் மன்னார் நீதிமன்றில் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

எனினும் தேசிய பாதுகாப்பு மற்றும் மன்னார் மாவட்ட கரையோரப்பகுதிகளை மையமாக கொண்டு நடைபெறும் போதைவஸ்து கடத்தல் உட்பட பல சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவேண்டிய நிலையில், பள்ளிமுனை பகுதியில் பொதுமக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் அங்கிருந்து வெளியேற முடியாது என கடற்படையினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கோரிக்கைகளை நீதிமன்றில் முன் வைத்திருந்தனர்.

இலங்கை அரசாங்கம், பள்ளிமுனையில் கடற்படையினர் வசமுள்ள பொதுமக்களின் குறித்த காணிகளை சட்டத்திற்கு அமைவாக சுவீகரித்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் குறித்த காணிகளை மீளக் கையளிக்க முடியாதெனவும், பள்ளிமுனை கடற்படையினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே குறித்த வழக்குகள் தொடர்பாக அதன் மனுதாரர்களான, பள்ளிமுனை மக்கள், கடற்படை முகாமிற்காக சுவீகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளுக்கு, நஷ்டஈட்டினை பெற்றுக்கொள்வதற்கு, நீதிமன்றில் இணக்கம் தெரிவித்ததாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் கூர்மைச் செய்திக்கு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட நீதிமன்றினால் கடந்த செப்டம்பர் 20ஆம் திகதி அன்றே பள்ளிமுனை கடற்படையினர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, வழங்கப்படவிருந்த நிலையில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் ஆகியோர் இவ்வழக்கில் தமக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படுதல் வேண்டும் எனும் கோரிக்கையை நீதிமன்றில் முன்வைத்தனர்.

இதையடுத்து இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மன்னார் நீதிமன்றம் குறித்த வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி செவ்வாய்கிழமை ஒத்தி வைத்துள்ளதுடன், அன்றைய தினமே குறித்த வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்படும் என மன்னார் மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்த போர் நடவடிக்கைகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். இந்த வகையில் பள்ளிமுனை பகுதியில் வசித்த தமிழ் மீனவக் குடும்பங்களும், தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறினர். இச்சூழ்நிலையில் பள்ளிமுனை கடற்கரைக்கு அருகாமையில் அமைந்திருந்த பொதுமக்களின் காணிகளும், வீடுகளும் கடந்த 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதக் காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினராலும், பொலிஸாராலும் கூட்டாக ஆக்கிரமிக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டு பள்ளிமுனையில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர். எனினும் இலங்கைப் பொலிஸார் பள்ளிமுனையில் உள்ள பொதுமக்களின் இருப்பிடங்களிலும் காணிகளிலும் தொடர்ந்தும் நிலைகொண்டிருந்தனர். எனினும் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் பள்ளிமுனையில் பொதுமக்களின் இருப்பிடங்களில் முகாமிட்டிருந்த இலங்கைப் பொலிஸாரும் அங்கிருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், பள்ளிமுனை தமிழ் மீனவர்கள் பரம்பரை, பரம்பரையாக வசித்த வாழ்விடங்களை கடற்படையினர் கைப்பற்றிக் கொண்டதுடன் அப்பகுதியை முழுமையாகக் ஆக்கிரமித்தனர். அத்துடன் தம்மால் ஆக்கிரமிக்கப்பட்ட அப்பகுதியை இலங்கை கடற்படையினர் பாரிய கடற்படைத் தளமாக மாற்றிகொண்டனர்.

அத்துடன் பள்ளிமுனையில் தாம் நிலைகொண்டுள்ள பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் கடற்படையினர் பிரகடனப்படுத்தியிருந்தனர். இவ்விதம் இலங்கை கடற்படையினர் பள்ளிமுனை மக்களின் சுமார் இரண்டு ஏக்கர் இரண்டு பேர்ச் விஸ்தீரணமுடைய காணியில் தொடர்ந்தும் இன்று வரை நிலைகொண்டுள்ள நிலையில் அதற்கெதிராக பள்ளிமுனை மக்களால் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பே, எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.