இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பெயரில்

ரணிலுடன் சம்பந்தன், செல்வம், சுமந்திரன், சித்தார்த்தன் சந்திப்பு

வடக்குக் கிழக்கு அதிகாரங்கள் பற்றிப் பரிசீலித்துவிட்டுப் பத்தாம் திகதி ரணில் பதிலளிப்பாராம்
பதிப்பு: 2023 ஜன. 05 21:00
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 07 00:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்களை ஆராய்ந்து எதிர்வரும் பத்தாம் திகதி பதிலளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்புத் தொடர்பாக சுமந்திரன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
 
வடக்குக் கிழக்கு நிலைமைகள் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எடுத்துக் கூறியதாகவும், சுமந்திரன் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் மூன்றாவது தடவையாக இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இன்றைய சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியாகப் பேச்சுக்கள் இடம்பெறும் என்று சுமந்திரன் கூறினார்.

இச் சந்திப்பில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதா அல்லது சமஸ்டி ஆட்சி முறை பற்றிப் பேசப்பட்டதா என்று சுமந்திரன் எதுவுமே கூறவில்லை. வடக்குக் கிழக்கு அதிகாரங்கள் பற்றிப் பேசியதாக மாத்திரமே கூறியிருந்தார்.

இச் சந்திப்பில் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, பங்குபற்றவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சந்திப்பை ஏற்கனவே புறக்கணித்துள்ளது.