தமிழர் தாயகமான

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கப் போர்க் கப்பல்- தொள்ளாயிரம் கடற்படை உயர் அதிகாரிகளும் வருகை

இலங்கை அரசாங்கம் மௌனம்- அமெரிக்கா இராணுவ முகம் அமைக்கும் என்கிறார் திஸ்ஸ
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 24 22:15
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 27 16:45
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக் கடற்படைக்கு கடந்த மாதம் திருகோணமலைத் துறைகத்தில் உள்ள இலங்கைக் கடற்படையின் பிரதான முகாமில் பயிற்சியளித்துள்ள நிலையில், அமெரிக்காவின் கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage என்ற கப்பல் இன்று வெள்ளிக்கிழமை காலை வருகை தந்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் துாதரகத் தகவல்கள் கூறுகின்றன. சுமாா் தொள்ளாயிரம் அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளும் கப்பலில் வருகை தந்துள்ளனார். ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தந்து, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைத் துறைமுகத்தி்ற்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.
 
இந்த நிலையில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage என்ற கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எதுவுமே கூறவில்லை.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தி மற்றும் கடல்சாா் பாதுகாப்புக் குறித்து மைத்திரி- ரணில் அரசாங்கத்துடன் விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகம் உள்ளிட்ட பிரதேசங்களை இந்தியஅரசு சார்ந்த வல்லரசுகளிடம் கையளிக்கும் இந்த அணுகுமுறை, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் நியாயப்பாட்டை 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் முற்றாகவே அழித்துவிடும் நோக்கம் கொண்டவை-- அவதானிகள்.

திருகோணமலைத் துறைமுகம் உள்ளிட்ட கடல்சார் பிரதேசங்கள் மற்றும் முக்கிய துறைமுகங்களை ஜப்பான் கையாள்வது குறித்தும் அவர் பேச்சு நடத்தியிருந்தார்.

இலங்கையின் நான்காவது அதிவேக தாக்குதல் படகு அணியின் 26 கடற்படையினர் சிறப்பு படகு படையணியின் 36 கடற்படையினர் உட்பட 62 இலங்கைக் கடற்படையினர் அமெரிக்கக் கடற்படையின் விசேட அதிகாரிகள் குழுவிடம் கடந்த மாதம் பயிற்சி பெற்றிருந்தனர்.

இந்தப் பயிற்சிகள் நிறைவடைந்த நியையிலேயே, 30 மில்லியன் அமெரிக்க தொடர்களை இலங்கை இராணுவத்தி்ன் பல்வேறு அபிவிருத்திகளுக்காக வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கு 80 பில்லியன்களை நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தது.

திருகோணமலையின் கடல்ப் பகுதியை மையப்படுத்திய எண்ணை மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ள Schlumberger என்ற அமெரிக்க நிறுவனம் கட்ந்த மே மாதம் 30 ஆம் திகதி ஒப்பந்தம் ஒன்றை இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டிருந்தது.

இந்த நிலையில், சீன அரசு, இலங்கையில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்து இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்ததாகவும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியிருந்தார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் திஸ்ஸ விதாரன நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

அதேவேளை, வல்லரசுகளின் போட்டிக்களமாக இலங்கை மாறி வரும் நிலையிலும் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகம் உள்ளிட்ட அனைத்தையும் இந்திய அரசு சார்ந்த வல்லரசுகளிடமே ஒப்படைத்து விடுவதற்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் முயற்சிப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இந்த அணுகுமுறை தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் நியாயப்பாட்டை 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் முற்றாகவே அழித்துவிடும் நோக்கம் என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.