இலங்கைத்தீவின் சுதந்திர தின கரிநாள்

வடக்கில் இருந்து கிழக்குக்குப் பேரணி- இரண்டாம் நாளும் பெருமளவு மக்கள் பங்கேற்பு

யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு
பதிப்பு: 2023 பெப். 05 23:01
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 05 23:54
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
இலங்கைத்தீவின் எழுபத்து ஐந்தாவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடராக மேற்கொண்டு வரும் பேரணியில் பொதுமக்கள் பலரும் பங்குபற்றி வருகின்றனர். தமிழ்த்தேசியக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளின்றி கலந்துகொண்டுள்ளனர். நான்காம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்த பேரணி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் முல்லைத்தீவில் நிறைவடைந்துள்ளது. இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவினர்களுக்காகப் பேரணியில் பங்குபற்றிய பொதுமக்கள் கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தியிருந்தனர். பெரும் திரளான மக்கள் முள்ளிவாய்காலில் ஒன்றுகூடியிருந்தனர்.
 
ஈழத்தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகியவற்றை வென்றெடுக்கும் நோக்கில் இந்த பேரணி இடம்பெற்று வருகின்றது.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு நோக்கிய பேரணியைத் தடுக்க இலங்கைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் பெரும் கெடுபிடிகளில் ஈடுபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் ஆரம்பித்த பேரணியின்போது இலங்கைப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் சிவில் உடைகளில் நின்று தங்களைப் படம் எடுத்ததாகப் பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகிய பேரணி, செம்மணிப் பிரதேசத்தைச் சென்றடைந்தது. அங்கிருந்து நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து, முதலாம் நாள் உரிமைப் பேரணி இரணைமடுவில் முடிவடைந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் பேரணி காலை ஒன்பது மணிக்குப் பரந்தனில் ஆரம்பமாகி புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை சென்றடைந்தது.

அங்கிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது. முல்லைத்தீவில் இரண்டாம் நாள் பேரணி நிறைவடைந்தது.

நாளை திங்கட்கிழமை அங்கிருந்து திருகோணமலை நோக்கி பேரணி இடம்பெறுமென மாணவர்கள் தெரிவித்துள்ளனர்