தமிழர் பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதை நியாயப்படுத்திய நிலையில்

தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சரத் வீரசேகர நியமனம்

ரணில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
பதிப்பு: 2023 மார்ச் 10 17:57
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 12 10:06
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகின்ற முன்னாள் இராணுவ அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர இலங்கைத் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சர், நீதி அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து அமைச்சரவையில் முன்வைத்த கூட்டுப் பிரேரணையின் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நியமனத்துக்கான அங்கீகாரத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான சட்ட வரைபு ஒன்றைத் தயாரிக்க வேண்டுமென அமைச்சரவையில் பல தடவைகள் பேசப்பட்டது என்றும், அதற்கு அமைவாகவே கூட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

வடக்குக் கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றமை, இராணுவம் தமிழர்களின் பாரம்பரியக் காணிகளை அபகரிக்கின்றமை போன்ற செயற்பாடுகளை நியாயப்படுத்தி வரும் சரத் வீரசேகர, பௌத்த விவகாரை விஸ்தரிப்புச் செயற்பாடுகளை தேசிய பாதுகாப்பாகக் கருத வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.