தமிழர் தாயகத்தை உடைக்கும் நோக்கில்

கிழக்குக் கரைக்கு அப்பால் எண்ணெய் வள ஆய்வு ஆரம்பம்- அமெரிக்க நிறுவனத்திடம் கையளித்தது மைத்திரி-ரணில் அரசு

கொழும்புத் துறை முகத்தில் BGP Pioneer என்ற கப்பல்- ஆய்வு முடிந்ததும் சீனாவிடம் கையளிக்க முடியாதவாறு ஏற்பாடு
பதிப்பு: 2018 செப். 01 08:13
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 06 23:27
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள JS5 மற்றும் JS6 ஆகிய வலயங்களில் ஐயாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பயணம் செய்து, இந்தக் கப்பல் கடலடியில் உள்ள நில அதிர்வு அலைகளை ஆராயவுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் குறித்து ஆராய்வதற்காக Schlumberger என்ற பாரிய எண்ணெய் வயல் சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனமான Eastern Echo DMCC உடன் மே மாதம் இலங்கை ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது.
 
இலங்கையின் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்சுனா ரணதுங்க மே மாதம் 30 ஆம் திகதி இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்.

ஈழத் தமிழர்களின் கடற் பிரதேசங்கள் மற்றும் நிலங்களை இந்தியச் சாா்பு நிலை நாடுகளான அமெரிக்கா. ஜப்பான், ஆகிய நாடுகளிடம் மைத்திரி- ரணில் அரசாங்கம் கையளித்து வருகின்றது-- அவதானிகள்.

கிழக்கின் கடலில் எண்ணெய் வள ஆய்வு மட்டுமல்ல, இராணுவ ரீதியான கடற்படை உறவையும் அமெரிக்கா பலப்படுத்தியிருக்கிறதென்பதையும் இலங்கையின் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Schlumberger என்ற பாரிய எண்ணெய் வயல் சேவை இந்த நிறுவனம், தரவுகளைத் திரட்டி, அவற்றைபப் பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவுள்ளது. அதற்காக இரு பரிமான மற்றும் முப்பரிமான தரவுகளை அது திரட்டவுள்ளது.

இந்த ஆய்வுக்கு Eastern Echo DMCC நிறுவனம் ஐம்பது மில்லியன் டொலரை முதலிடுமெனவும், பல்வேறு முதலீட்டாளர்களுக்கு தரவுகளை விற்பனை செய்து அந்தப் பணத்தை மீளப் பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்
பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல், சீனத் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் துறை முகத்திற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

இந்த விற்பனை நடவடிக்கைகள் இலங்கை அரசுடன் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

2016 ஆம் ஆண்டு கிழக்கு கடலில் எண்ணெய வள ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியாக, Total என்ற பிரெஞ்சு நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்திருந்தது.

ஆனாலும் பல்வேறு வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் மற்றும் இலங்கை அரசு ஆய்வு முடிவடைந்த பின்னர் வேறு நாடுகளிடம் கையளிக்கலாம் என்ற ஒரு வகையான அச்சத்தின் காரணமாக அந்த உடன்படிக்கையை பிரான்ஸ் கைவிட்டது.

தமிழ், சிங்கள மீனவர்களை மோதவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை, ஈழத் தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல, இலங்கைத் தீவின் முழு இறைமைக்கும் ஆபத்து.

இந்த நிலையில் அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமான Eastern Echo DMCC என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. Eastern Echo என்ற நிறுவனம் மத்தியகிழக்கில் டுபாயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறை முகத்திற்கு வரும் என்ற இந்தச் செய்தியை lankabusinessonline.com என்ற செய்தி இணையத்தளம் நேற்று வெள்ளி்க்கிழமை வெளியிட்டிருந்தது.

BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் சீன அரசின் உடமையாகவுள்ள வியாபார நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமானது. கடல் பிரதேசங்களில் எண்ணெய் வளம் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்வதற்கான நவீன வசதிகள் இந்தக் கப்பலில் உள்ளன.

இதனால், இந்தக் கப்பலை மத்திய கிழக்கில் இருந்து தென் அமெரிக்கா வரை, அமெரிக்கா வாடகைக்கு அமர்த்துவது வழமை. அந்த அடிப்படையில் டுபாய் நிறுவனம் தான் இந்தக் கப்பலை வாடகைக்கு எடுத்துள்ளது.

இலங்கைக் கிழக்குக் கரை உள்ளிட்ட கடற்பகுதிகளில் எண்ணெய் வயல் ஆய்வு முடிவடைந்த பின்னர் இந்த நிறுவனம் இலங்கை அரசுக்கு அதனை கையளிக்கும்.

ஆனாலும் இலங்கை அரசு இதனை வேறு நாடுகளுக்கு வழங்கும் என்ற சந்தேகம் உள்ளதால் அவ்வாறு விற்பனை செய்ய முடியாதவாறு அமெரிக்கா காய்களை நகர்த்தி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கக் கப்பல் வந்து இலங்கைக் கடற்படையினருக்கு பயிற்சி மற்றும் கூட்டு ஒத்துழைப்புகள் மூலம், எண்ணெய் வளங்களை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாதவாறான அணுகுமுறைகளை அமெரிக்கா தற்போதிருந்தே ஆரம்்பித்துள்ளது.

அத்துடன் ஜப்பான் கடற்படையின் ஒத்துழைப்புகள் மூலமாகவும் இலங்கைக்கு அமெரிக்கா கடிவாளமிட்டுள்ளது.

இந்த ஆய்வு நிறைவடைந்த பின்னர் வேண்டுமானால் இந்தியாவுக்கு இலங்கை அரசு விற்பனை செய்யலாம். அதனை அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தடுக்காது. ஆனால், சீன அரசுக்கு இலங்கையால் விற்பனை செய்யவே முடியாது.

அதேவேளை, தமிழர் தாயகம் வடமாகாணம் மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கூறியே 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் இதற்கான மறைமுகத் தொடர்புகளை ஆரம்பித்திருந்தது. அதன் மூலம் அமெரிக்காவுக்கு தமிழர் தாயக கடற் பிரதேசங்கள் மீதான விருப்பங்கள் மேலும் துாண்டிவிடப்பட்டன.

அதனடிப்படையில் JS5 மற்றும் JS6 முழுவதையும் கையளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது முல்லைத்தீவு கொக்கிளாய் இருந்து கிழக்கு வரையான ஈழக்கடல் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களை கடலட்டை பிடிப்பதற்கு அனுமதியளித்து, அதன் மூலம் தமிழ் சிங்கள மீ்னவர்களை மோதவிட்டு, இரு இனங்களின் மீனவர்களையும் வெளிநாடுகளுக்கு அடிமையாக்கி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடற் பிரதேசத்தைக் கையளிக்கும் நோக்கமே மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு உள்ளது.

ஆகவே, இந்த நடைமுறைகளின் மூலம் ஈழத் தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல, இலங்கைத் தீவின் முழு இறைமைக்கும் ஆபத்து ஏற்படும்.

இவ்வாறான அணுகுமுறைகள் என்பது 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பவம் வரை இலங்கை அரசுக்கு சாதகமாக அமையவில்லை.

ஆனால், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூலில் இலங்கை அரசின் மேற்படி அணுகுமுறைகளுக்கு சாதகமான ஒரு நிலையை உருவாக்கியுள்ளதாக அவதானிகள் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

முல்லைத்தீவில் இருந்து கிழக்கு வரையான ஈழத் தமிழர்களின் கடற் பகுதியை அமெரிக்காவுக்கு தாரை வார்க்கின்றதா இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற தலைப்பில் கடந்த மே மாதம் கூர்மைச் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதேவேளை, அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக் கடற்படைக்கு கடந்த மாதம் திருகோணமலைத் துறைகத்தில் உள்ள இலங்கைக் கடற்படையின் பிரதான முகாமில் பயிற்சியளித்திருந்தது.

அதனையடுத்து அமெரிக்காவின் USS Anchorage கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்துள்ளது. சுமாா் தொள்ளாயிரம் அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளும் கப்பலில் வந்திருந்தனர்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்து, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைத் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.

ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவை கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) சென்ற புதன்கிழமை கையளித்திருந்தார்.

ஈழத் தமிழர்களின் கடற் பிரதேசங்கள் மற்றும் நிலங்களை இந்தியச் சாா்பு நிலை நாடுகளான அமெரிக்கா. ஜப்பான், ஆகிய நாடுகளிடம் மைத்திரி- ரணில் அரசாங்கம் கையளித்து வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை உடைக்கும் நோக்கிலும் தமிழ்த்தேசிய அரசியலை பலவீனப்படுத்தும் வகையிலும் துாரநோக்குச் சிந்தனையுடன் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு செயற்படுவதாகவும் அவதானிகள் கூறுகின்றனர்.

ஈழத் தமிழர் விடயத்தில் இலங்கை முப்படையினரை உள்ளடக்கிய, இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் இந்தப் பொறிமுறையைப் புரிந்து கொண்டு, மாற்று அரசியல் செயன்முறைகளை வகுக்கக் கூடியதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் அமையவில்லை என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.