2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான அரசியல்

ஜப்பான் அமைச்சர்களின் வருகையின் பின்னர் சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றக்குழு இந்தியாவுக்குப் பயணம்

மஹிந்த ராஜபக்சவும் புதுடில்லிக்குச் செல்கிறார்
பதிப்பு: 2018 செப். 02 23:00
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 03 08:13
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ்ததேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் குழு ஒன்று இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளது. அதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்திய ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமனியன் சுவாமியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். இந்தியாவுக்குச் செல்லவுள்ள இலங்கை நாடாளுமன்றக்குழு எதிர்வரும் ஒன்பதாம் திகதியில் இருந்து பத்தாம் திகதி வரை இந்தியாவில் தங்கி நிற்கவுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் பயணமும் சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றக் குழுவின் பயனமும் வெவ்வேறானவை என இலங்கை நாடாளுமன்றச் செயலாளர் கூறுகின்றார்.
 
ஆனாலும் ஒரே காலப்பகுதியில் புதுடில்லியில் தங்கி நிற்கவுள்ளமை தொடர்பாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்திய- இலங்கை உறவை எவ்வாறு பலப்படுத்துவது மற்றும் இந்து சமுத்திரப் பாதுகாப்பு விடயங்கள் குறித்து இந்தக் குழு புதுடில்லியில் கலந்துரையாடும் என இலங்கை நாடாளுமன்ற வெளி விவகாரக் குழுவின் தகவல்கள் கூறுகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலில் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தமக்கு ஏற்றமாதிரியான அழுத்தங்களை இலங்கை மீது பிரயோகித்து வருவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்குச் செல்லவுள்ள சம்பந்தன் உள்ளிட்ட குழுவில் இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரிய, சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், றிஸாட் பதியுதீன், மனோ கணேசன், கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன, ஜே.வி.பி உறுப்பினர் விஜித ஹேரத், மற்றும் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்த ஆகியோர் அடங்குகின்றனர்.

அமெரிக்க நிறுவனம் ஒன்று திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றக் குழுவின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது.

ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவை கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த புதன்கிழமை கையளித்திருந்தார்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஆகியோர் கடந்த மாத இறுதியில் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இலங்கை மீதான சீன அரசின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டே ஜப்பான் அமைச்சர்களின் கொழும்புப் பயணம் அமைந்திருந்தது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இலங்கைக்கு வருவதற்கு முன்னர் கடந்த மாதம் 19 ஆம் திகதி இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.

அம்பாந்தோட்டை, திருகோணமலைத் துறைமுகங்களை இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளும் பயன்படுத்தவது குறித்து புதுடில்லியில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் பேச்சு நடத்திய பின்னரே, 22 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலில் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தமக்கு ஏற்றமாதிரியான அழுத்தங்களை இலங்கை மீது பிரயோகித்து வருவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

அதேவேளை, சுப்பிரமணிய சுவாமி, கடந்த வாரம் இலங்கையின் அம்பாந்தோட்டைக்குச் சென்று இந்தியப் பயணத்துக்கான அழைப்பிதழை மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.