இலங்கை முப்படைகளின் பிரதானி

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண தமிழ் மாணவர்கள் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகவில்லை

வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவு கூறுகின்றது
பதிப்பு: 2018 செப். 10 12:57
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 10 15:05
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை முப்படைகளின் பிரதானியும் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை. ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொருபேரை கொழும்பில் இருந்து வெள்ளை வானில் கடத்திச் சென்ற பிரதான குற்றவாளியான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி என்பவருக்கு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூகக் கொள்ளை தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
ஆனால், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண மெக்சிக்கோவிற்குச் சென்றுள்ளதாக இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் அங்கு சென்றமை தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லை என இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கையின் முப்படைகள் சார்பில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண மெக்சிக்கோவில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வில் பங்குகொள்வதற்காகச் சென்றுள்ளார் என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் பதினொரு தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான எதிரியான நேவி சம்பத் மறைந்து வாழ்வதற்கு உதவியாக, ஐந்து இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டிருந்ததாக இலங்கை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் கூறியிருந்தனர்.

2006 ஆம் ஆண்டு கொழும்பு தெஹிவளை, கொட்டாஞ்சேனை பிரதேசங்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பதினொரு தமிழ் மாணவர்கள் திருகோணமலையில் உள்ள இலங்கைக் கடற்படையின் இரகசிய முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அதேவேளை, தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் கொல்லப்பட்டமைக்கும் காரணமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக கடந்த யூன் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் நாவற்குழியில், 1996ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன தலைமையிலான படையினரால் 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

அது தெடர்பான மனுவைத் தாக்கல் செய்வதற்கு, உதவியளித்த பெண்ணும் அவரது ஆறு வயது மகனும் அடையாளம் தெரியாத குழுவினரால் கடந்த யூலை மாதம் 14 ஆம் திகதி தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.