கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு வெல்லாவெளி சின்னவத்தை கண்டத்தில் தமிழர்களின் காணிகள் பௌத்த குருமாரினால் அபகரிப்பு

தடுத்து நிறுத்த இலங்கைப் பொலிஸாரும் மறுப்பு
பதிப்பு: 2018 செப். 11 18:03
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 12 10:18
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாகரையின் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை 25 எம்.சீ 28ஆம் கண்டத்தில் இருக்கும் தமிழர்களது காணிகளை பௌத்த பிக்குமார் அபகரிப்பதாக முறையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் இருக்கும் அம்பேப்பிட்டிய சுமணரெத்தின தேரரும் சின்னவத்தையில் இருக்கும் பௌத்த பிக்குவும் சேர்ந்து தமிழ் அரச அதிகாரிகளை அச்சுறுத்தி காணியை அபகரித்துச் சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காணி உரிமையாளர் நாகமுத்து லக்சுமணன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்த முடியாதுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
 
நாகமுத்து லக்சுமணன், துறைநீலாவணை ஏழாம் வட்டடாரத்தில் வாழ்கிறார். நான்கு பேருக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் காணிக்கு உரிய ஆவணங்கள் இருந்தும் பௌத்த பிக்குமார் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அபகரிக்க முற்படுவதாக அவர் கூறினார்.

வெல்லாவெளி பிரதேச செயலாளரிடம் முறையிட்டும் எவ்வித பயனுமில்லை. வெல்லாவெளியில் உள்ள இலங்கைப் பொலிசாரிடம் சென்று முறையிட்ட போது, பௌத்த பிக்குமாருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென்று கூறுகின்றனர்.

கெவுளியாமடுவில் காணி அபகரிப்பில் ஈடுபட்ட இந்தப் பௌத்த பிக்கு சின்னவத்தையில் இருக்கும் இன்னுமொரு பௌத்த பிக்குவுடன் சேர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் உள்ள தமிழர்களது காணிகளைத் திட்டமிட்டமுறையில் அபகரித்து சிங்கள மக்களிடம் கையளித்து வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.