அனல்மின் நிலையமும் மீனவர்கள் போராட்டமும்!

தமிழகம் உடன்குடியில் கடல்வழி முற்றுகை போராட்டம் நடத்திய மீனவர்கள்

தமிழர் கடலின் இருபுறமும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் ஆலைகள்!
பதிப்பு: 2018 செப். 19 01:42
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: செப். 23 15:30
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணம் அருகே உள்ள உடன்குடி கல்லாமொழியில், கட்டப்படும் அனல்மின்நிலைய திட்டத்தை கைவிடக்கோரியும் கப்பல்களில் கொண்டு வரப்படும் நிலக்கரி பொதிகளை இறக்குவதற்கு வசதியாக, கல்லாமொழி கடற்கரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்த நீளத்திற்கு கட்டப்படும் பாலம் மற்றும் இறங்குதளம் பணியை நிறுத்திடவும் வலியுறுத்தி, 17.09.2018 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், தூத்துக்குடி கடற்கரை கிராமங்களைச் சோ்ந்த திரேஸ்பரம், கால்லாமொழி, ஆலந்தலை, மணப்பாடு உட்பட்ட 26 கிராமங்களைச் சோ்ந்த மீனவர்கள், 380-திற்கும் அதிகமான படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடல் வழியாக இறங்குதளம் கட்டப்படும் பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர்.
 
மீனவர்கள் படகுகள் மூலம் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே வேளையில், ஆலந்தலையில் மீனவப் பெண்கள் கடற்கரையில் மனிதசங்கிலிப் போராட்டத்தின் மூலம் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

தொடர்ச்சியாக, பல்வேறு சூழலியல் மாற்றங்களால் பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரம், இத்தகைய ஆலை மற்றும் அதன் துணை வேலைப்பாடுகளால் மேலும் பாதிப்புக்குள்ளாகும் என்பது மீனவர்களின் போராட்டத்தில் ஒலிக்கும் குரல்.

"வேண்டாம், வேண்டாம், நிலக்கரி இறங்கு தளம் வேண்டாம், வாழ விடு, வாழ விடு, மீனவர்களை வாழ விடு, அழிக்காதே அழிக்காதே மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே" என்று கோஷங்கள் எழுப்பினர்.

அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து ஆலந்­த­லை­யில் கூடி ஆலோ­சித்த தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்துக்காக கல்லாமொழியில் அமைய உள்ள இறங்குதளம் திட்டத்தை எதிர்த்து, மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய ஒன்றியம் - இலங்கை கூட்டுத் திட்டத்தினால், திருகோணமலை சம்பூர் பகுதியில் அமைக்க இருந்த அனல்மின் நிலையத்திற்கு மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையை கூர்மை நினைவூட்ட விரும்புகிறது.

அதேப்போன்று, தூத்துக்குடி கடலோரப்பகுதிகளில், ஏற்கனவே ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளினால் வெளியேற்றப்படும் நச்சுக் கழிவுகளால் கடல்சூழ் பல்உயிர் வலையத்தில் (Marine biodiversity zone) கடும் எதிர்விளைவுகள் உண்டாகிவரும் நிலையில், இத்தகைய ஆலைகளின் தொடர் செயல்பாடுகளால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, தமிழர் கடலின் மறுபுறம் இருக்கும் தமிழ்ப் பிரதேச மீனவர்களும் பாதிப்படைவார்கள்.

தூத்துக்குடியில் பல்வேறு ஆலைகளின் நச்சு செயற்பாட்டிற்கு எதிரான அனைத்து சுற்றுச்சூழல் போராட்டங்களும், தமிழகக் கடற்கரையோர மீனவர்களின் போராட்டம் மட்டும் அன்று என்பதனை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்!

உடன்குடி போராட்டத்தில் ஈடுபட்டோரின் கருத்துப்பகிர்வு: கல்லாமொழியில் உள்ள மீனவ மக்களை கூர்மை செய்தியாளர் தொடர்புகொண்டு பேசியபொழுது,

"மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் தான் நிலக்கரி இறங்குதளம் அமைக்கின்றனர். இதனால் இந்த பகுதி அழிந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. இரவு நேரங்களில் துளை போடுவதால் கடுமையான அதிர்வு ஏற்படுகிறது. கடற்கரையில் கற்குவியல்களே அமைக்கப்படாது என கூறினர். ஆனால் தற்போது பலகோடி ரூபாய் மதிப்புள்ள கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

"இங்கு கப்பல்கள் வந்து சென்றால் எங்கள் படகுகள் சேதமடையும். எங்களால் எங்களது பாரம்பரியமான மீன் பிடி தொழிலை செய்ய முடியாத நிலை ஏற்படும். நாங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த இந்த நிலத்தை விட்டே வெளியேறுவதை விட வேறு வழி இருக்காது." என வேதனையோடு கூறினார்.

அனல் மின் நிலையம் குறித்து உடன்குடி மக்கள் கூறுகையில், " தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அப்படி எங்களது தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடல் முத்தும் கடல் உணவும் எங்களது உடன்குடிக்கு பனை கருப்பட்டி பொருட்களும் வெற்றிலையும் பெருமை சேர்த்தன.

"காலப்போக்கி நல்லத்தண்ணீர் இல்லாததால் வெற்றிலை சாகுப்படி அழிந்து போனது. இப்பொழுது இருப்பது பனை கருப்பட்டி பொருட்கள் மட்டும்தான். தென்னை பனை முருங்கை தான் இப்பொழுது விவசாயமாக நடைபெறுகிறது. இங்கு அனல் மின் நிலையம் ஏற்பட்டால் அதில் இருந்து வெளிப்படும் சாம்பலும் புகையும் எங்கள் பனை வளத்தை முழுமையாக அழித்துவிடும்" என கூறினர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தை பொறுத்தவரை முதலில் கரையோர மக்கள் மட்டுமே இருந்தனர் , பின்னர் தான் ஸ்டெர்லைட் ஆலையின் தீங்கை உணர்ந்த ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் போராட்டத்தில் இணைந்தனர். ஏறத்தாழ 30 கிராமங்களை அழிவிற்குள்ளாக்கும் அனல் மின் நிலையம் மற்றும் நிலக்கரி இறங்குதள அமைப்பதை ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் இணைத்து எதிர்க்க வேண்டுமென்கிறார் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பெயர் குறிப்பிட விரும்பாத தூத்துக்குடியைச் சேர்ந்த செயற்பாட்டாளர்.

உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பின்னணி :

2007: திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான அன்றைய தமிழ்நாடு இந்திய ஒன்றிய அரசுடன் இணைந்து உடன்குடி அனல்மின் நிலைய கூட்டுத் திட்டத்திற்கு அச்சாரம் இடுகிறது.

2008: பாரத மிகு மின் நிலையத்துக்கும்(பெல்), தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதை (2007) தொடர்ந்து உடன்குடி மின் கழகம் என்ற ஒரு கூட்டு நிறுவனம் ஏற்படுத்தப்படுகிறது.

2009-2011: உடன்குடி அனல் மின் திட்டத்தின் மதிப்பீடு ரூ.8,000 கோடி என்று கணக்கிடப்பட்டது. இந்த ரூ.8,000 கோடி கடன் மற்றும் பங்கு மூலதனத் தொகையை உள்ளடக்கியதாகும். பங்கு மூலதனத் தொகையில் 26% தமிழ்நாடு மின்சார வாரியத்தாலும், 26% பாரத மிகுமின் நிறுவனத்தாலும் வழங்கப்படும். எஞ்சிய 48% பங்கு மூலதனம் நிதி நிறுவனத்தாலோ அல்லது இந்த திட்டத்தைச் செயல்படுத்த முன்வரும் தனியார் நிறுவனத்தாலோ வழங்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தனியார் நிறுவனம் எதுவென்பது 2011 மே வரை உறுதிசெய்யப்படவே இல்லை.

2011: திமுக ஆட்சிக்கு பின் பொறுப்பேற்ற ஜெயலலிதா அதிமுக அரசாங்கம், திட்டத்தை தமிழக அரசே பொறுப்பேற்று நடத்தும் என அறிவிக்கிறார். 2011-2016: இந்தத் திட்டத்துக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்று கிடைக்கப்பெறவில்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாததற்கு பாரத மிகு மின் நிறுவனத்தின் ஒத்துழைப்பின்மையும் ஒரு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. 2016-2018: சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடத்தப்படுகிறது. உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் வெளியிட்ட புதிய ஒப்பந்தப்புள்ளிகள் மீதான நடவடிக்கைகளைத் தொடர அனுமதியை சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது.

2018: தை மாதத்தில், உடன்குடி மின் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழகத்துக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்துக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, அலகு 1, 2 ஆகியவற்றின் மூலம் தலா 660 மெகாவாட் வீதம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, நிலக்கரி மூலம் இயங்கும் அதி நவீன அனல் மின் நிலையம் நிறுவுவதற்கு ரூ.10,453 கோடி கடனுதவி அளிக்க வகை செய்யப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் உடன்குடி மின் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தை மாதம் (சனவரி 29) அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.