வடமாகாணம்

முல்லைத்தீவில் கடும் வரட்சி, முப்பதாயிரம் குடும்பங்கள் பாதிப்பு- விவசாயச் செய்கைகள் நிறுத்தம்

நிவாரணம் வழங்கப்பட்டது என்கிறார் அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்
பதிப்பு: 2018 செப். 19 13:35
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 20 10:54
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணாயிரத்தி 103 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வரட்சி நிவாரணம் முதல் கட்டமாக ஆறாயிரத்தி 824 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஏழாயிரத்தி 296 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. வரட்சி தொடருமாக இருந்தால் பயிர்ச்செய்கைகள் மோசமாகப் பாதிக்கப்படும். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் நிலவும் கடும் வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 390 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் மூவாயிரத்தி 129 குடும்பங்களுக்கும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 222 குடும்பங்களுக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்தி 895 குடும்பங்களுக்கும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்தி 996 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 471 குடும்பங்களுக்குமாக மொத்தம் எண்ணாயிரத்தி 103 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இதற்கான நிதியை வழங்கியுள்ளது.

இதுவரை குடிதண்ணீர் விநியோகத்துக்கான நீரைப் பெறுவதில் பிரச்சினைகள் இல்லை. ஆயினும், மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் பிரதேச செயலாளர், பிரதேச சபையினர் தகவல் படி குடிதன்ணீர் விநியோகத்துக்கான நீரைப் பெற்றுக் கொள்வதற்குக் கிணறுகளை ஆழப்படுத்தவேண்டிய தேவை உள்ளது.

இதற்கு பெருமளவு நிதி தேவைப்படு்ன்றது. நிதியை பெற்றுக்கொள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான வரட்சி நிவாரணம் (உலருணவு) வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களாக பதின் நான்காயிரத்தி 999 குடும்பங்கள் மதிப்பிட்ப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக ஆறாயிரத்தி 824 விவசாயிகளுக்கு உலருணவு விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஏழாயிரத்தி 296 விவசாயிகளுக்கு உலருணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

அதேவேளை, முல்லைத்தீவில் நிலவும் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவரண உதவிகள் வழங்கப்பட்டாலும் இன்னும் உதவிகள் தேவைப்படுவதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் அமலன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் கடும் வறட்சி நிலவுவதாகவும் சுமார் முப்பதாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

பல கிராம சேவகர் பிரிவுகளில் விவசாயச் செய்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கொழும்பில் உள்ள இலங்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முல்லைத்தீவுச் செயலகத்துக்கு வழங்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்கள் முல்லைத்தீவு செயலகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் இதுவரை முழுமையாகப் பெறப்படவில்லையென செயலகத் தகவல்கள் கூறுகின்றன.