கிழக்கு மாகாணம்

அம்பாறையில் பொதுமக்களின் 300 ஏக்கர் காணிகளில் இலங்கை இராணுவம், வன இலாக திணைக்களம்

மீட்டுத்தருமாறு அரச அதிபரிடம் முறைப்பாடு
பதிப்பு: 2018 செப். 20 15:33
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: செப். 21 10:51
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இலங்கை இராணுவம், இலங்கை அரசின் வன இலாக திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். சுமார் முந்நூறு ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புடன் பொதுமக்கள் செல்ல முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை இராணுவம், இலங்கை வன இலகா திணைக்களம் உரிமை கோரியுள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
ஆனாலும் மைத்திரி- ரணில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த செயலாளர் பிரிவுகளில் உள்ள பாலையடி வட்டை 503 ஏக்கரும் கிரான்குளம் 885 ஏக்கரும், பொன்னான்வெளியில் 600 ஏக்கரும், அம்பலத்தாறு 144 ஏக்கரும், கீத்துப்பத்துவில் 96 ஏக்கரும், பாலமுனையில் 15 ஏக்கரும், அஸ்ரப்நகர் 150 ஏக்கரும் பொது மக்களின் பயிர்ச் செய்கை நிலங்களாகும்.

ஆனால், இலங்கை இராணுவம். இலங்கை வன இலாக திணைக்களம் இந்தக் காணிகளை தங்களுடைய தேவைக்குப் பயன்படுத்தவுள்ளது என்றும் இந்தக் காணிகளுக்குரிய உறுதிப்பத்திரம் தம்மிடம் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஐநூறு வீட்டுத் திட்டங்களையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் தற்போது இடைநிறுத்தியுள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்காவிடம் அம்பாறை மாவட்ட காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு எடுத்துக் கூறியுள்ளது.

தமது காணிகளை கையளிக்க ஏற்பாடு செய்யுமாறும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதேவேளை, தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எவரும் கவனம் செலுத்தவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.