புதுவை விடுதலைச்சமர், இந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர் போராட்டங்களில் களம் கண்டவர்

தனித்தமிழ் அறிஞர் புலவர் கி.த.பச்சையப்பன் சென்னையில் காலமானார்

இன்றைய தலைமுறையினரோடும் தன்முனைப்பு இல்லாது போராடியவர்
பதிப்பு: 2018 செப். 20 22:15
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: செப். 22 21:49
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தனித்தமிழியப் பேரறிவாளர் என தமிழகமெங்கும் பரவலாக அறியப்பட்ட, தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவருமான புலவர் கி.த.பச்சையப்பன் வழக்கொன்றிற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (20.09.2018) வந்திருந்தபொழுது அங்கேயே காலமானதாக தமிழக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புரட்சிக் கவி பாரதிதாசன் மீது மாறாத பற்றுக்கொண்டவர். மறைமலையடிகள் - பாவாணர் - பெருஞ்சித்திரனார் போன்ற தனித்தமிழறிஞர்களின் வழியில் இறுதிவரை களப்பணியாற்றிய இவர், தமிழகம் மற்றும் ஈழத்தமிழர்களுக்கான போராட்டங்கள், தமிழ் வழிக் கல்விக்கான தொடர் போராட்டங்கள் என எல்லாவற்றிலும் தன் இறுதி மூச்சு வரை உறுதியுடன் களத்தில் நின்றவர் என சமூக, அரசியல் இயக்கத் தலைவர்கள் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
 
பிரான்சு வல்லாதிக்கத்தை எதிர்த்த புதுச்சேரி விடுதலைப் போராட்டத்திலும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும் களம் கண்டவர்.

1999-ஆம் ஆண்டில் தமிழ்வழிக் கல்விக்காக நூறு தமிழறிஞர்கள் கலந்துகொண்ட சாகும்வரை உண்ணாவிரதத்தில் முன்னிலை வகித்தார்.

உயர் தனி செம்மொழியான தமிழுக்கு அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி சக தமிழறிஞர்களுடன் திரளாக டெல்லிக்குச் சென்று 2002 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போராட்டம் நடத்தினார்.

அதையடுத்தே அப்போதைய பா.ஜ.க. அரசு தமிழை செம்மொழியாக அறிவிக்கும் அந்தக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தது.

தமிழ் பத்திரிகை உலகில் பிறமொழிக்கலப்பில்லாமல் தனித்தமிழ்ச் சொற்கள் புழக்கத்துக்கு மீண்டும் வர மிகமுக்கிய காரணமான ‘தமிழ் ஓசை’ நாளேட்டில் மொழி நடை ஆசிரியராகப் பணியாற்றி, மூப்பிலும் தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததில் புலவர் கி.த.பச்சையப்பனுக்கு முக்கிய பங்கு உண்டு.

இயல்பாகத் தனித் தமிழில் உரையாடும் புலவர் பச்சையப்பன், தன்னுடன் ஒரு முறை சந்தித்துப் பேசுகிறவர்களையும் தனித்தமிழில் உரையாட தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளார்.

தமிழ் மொழிக் கல்வி - சமச்சீர் கல்வி என அண்மைக்காலங்களில் நடைபெற்ற போராட்டங்களிலும் இளம் செயற்பாட்டாளர்களுக்கு முன்னுதாரணமாக 85 வயதிலும் முன்வரிசையில் நின்று சராசரி போராட்டக்கார்களின் வரிசையில் எவ்வித தன்முனைப்பும் இல்லாமல் போராடுயிவர்.

மண் - மொழி - மக்கள் - இனம் - தமிழர் உரிமை, தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலை ஆகிய தளங்களிலும் தமிழ் மக்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஓய்வின்றி இயங்கிவந்த தனித்தமிழிய பேரறிவாளர் கி.த.பச்சையப்பன் அவர்கள் மறைந்தது தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் சி.மகேந்திரன் அவர்கள் தன் இரங்கல் அறிக்கையில்,

"புகழ் மிக்க தமிழறிஞர், தமிழ் மக்களின் உரிமை போராளி கி.த. பச்சையப்பன் அவர்களின் ஆரம்பம் பொதுவுடமை இயக்கத்தில் தான், தொடங்கியது. புதுச்சேரி குயவர் பாளையத்தில் ஆலைத் தொழிலாளர் குடும்ப பின்னணியில் பிறந்தவர்.

"புதுச்சேரியை பிரஞ்சு ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை செய்ய கம்யூனிஸ்டு தலைவர் வ. சுப்பையா தலைமையில் ஆயுதந்தாங்கிய கொரில்லா போராட்டம் நடைபெற்றது. இதில் மறைவிடத்திலிருந்து செய்தி சேகரித்து கொடுப்பவர்களுக்கு பெயர் கொரியர். வ. சுப்பையா அவர்களின் கொரியராக செயல்பட்டு தாக்குதலில் முதுகுத் தடம் பாதிப்புகுள்ளானவர். 84 வயதில் சென்னையில் மரணமடைந்தார். தோழருக்கு கம்யூனிஸ்டு கட்சியின் வீரவணக்கம்"

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரும் கூடங்குளப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளருமான சு.ப.உதயக்குமார் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில்,

"தமிழாசிரியரும், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவரும், தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவருமான தமிழறிஞர் ஐயா கி.த.பச்சையப்பன் அவர்கள் முழுமை அடைந்தார் எனும் செய்தி பேரிடியாய் அமைகிறது.

"தமிழ் ஓசை நாளேட்டில் மொழி நடை ஆசிரியராக ஐயா கி.த.ப. அவர்கள் செய்த அரும்பணி பற்றி பலரும் சிலாகித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய தமிழ்த் தொண்டின் தாக்கங்கள் இன்றளவும் நிறைந்திருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் தனது அறிக்கையில்,

"ஒரு சங்கத் தமிழ்ப் புலவர் எவ்வாறு மாண்பும் மிடுக்கும் கொண்டவராக இருந்திருப்பாரோ அவ்வாறே இருந்து எம்மையெல்லாம் வழிநடத்தியவர் ஐயா பச்சையப்பனார். தமிழுக்கு துயரம் வருகிற போது இத்தகைய பெருமக்களை இழப்பது மிகவும் வேதனைக்குரியது.

"ஐயா கி த பச்சையப்பனார் மறைவுக்கு தன்னாட்சித் தமிழகத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்கிக்கொள்கிறோம். ஐயாவின் கொள்கை வழி நின்று தமிழ் இந்த மண்ணை ஆள்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துமுடிப்போம் எனச் சூளுரை ஏற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.