செம்மரத்தின் பெயரால் தொடரும் பழங்குடி தமிழர் படுகொலைகள்!

சுட்டுக் கொல்கிறது ஆந்திரம் -அமைதியாகச் செல்கிறதா தமிழக அரசு?

நாதியற்ற மனிதர்களா தமிழர்கள்?
பதிப்பு: 2018 செப். 21 18:13
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: செப். 22 14:28
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஆந்திர மாநிலத்தில் காடுகளில் வேலை செய்ய, இடைத்தரகர்களால் தமிழகத்தில் இருந்து அழைத்துச்செல்லப்படும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த தமிழர்கள் கொல்லப்படுவதும், ஆந்திர சிறையில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2015இல் கொடூரமாக கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கு உரிய நீதியே இதுவரை கிடைக்காத நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பும் மீண்டும் தமிழர் ஒருவர் ஆந்திர வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்துள்ளார். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள், ஆபத்து எனத் தெரிந்தும் இதுபோன்ற வேலைகளுக்கு துணிந்து செல்லும் பழங்குடியின தமிழர்களின் சமூக காரணிகளை, கூர்மைச் செய்தித் தளம் அலச விரும்புகிறது.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி கிழக்கு தொடர்ச்சி மலையான ஜவ்வாதுமலையில் இருக்கும் கானமலை கிராம பழங்குடி சமூகத்தை சேர்ந்த காமராஜ் (வயது 50), கட்டிடக் கூலி வேலைக்கு ஆட்களை சேர்க்கும் இடைத்தரகர்கள் மூலமாக ஆந்திராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஏறத்தாழ இருபது நாட்கள் கடந்த நிலையில், அவரை செம்மரம் கடத்த வந்ததாகக் கூறி, ஆந்திர வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளது.

காமராஜின் சடலத்தை கொண்டுவந்த ஆந்திர அரசின் வாகனம், சாலை வசதி இல்லாத ஜவ்வாதுமலையில் ஏற்ற முடியாது என்று கூறி கானமலை கிராமத்துக்கு 5 கிமீ முன்பாகவே உடலை சாலையிலேயே கிடத்திவிட்டு சென்றுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி காமராஜின் உடல் மறுஉடல் கூராய்வு செய்யப்பட்டபொழுது, அவரது உடம்பில் 7 துப்பாக்கி குண்டு துகள்களும் உடைந்த எலும்புகளும் இருந்தது கண்டறியபட்டுள்ளது.

செம்மரக் கடத்தல் என்ற காரணத்தைச் சொல்லி ஆந்திரா அரசு தொடர்ந்து படுகொலை செய்து வரும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஏழை தொழிலாளர்களை காப்பாற்றவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு எவ்வித முயற்சியும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

அதோடு, ஆந்திர சிறையில் உள்ள அப்பாவிகளை காக்கவும் இங்குள்ள பழங்குடி மக்கள் அன்றாடும் ஆந்திர காவல்துறையினரால் கடத்தி செல்லப்படுவதை தடுக்கவும் உரிய சட்டப்பாதுக்காப்பைத் தரவும் முன்வருவதில்லை என்றும் இதுகுறித்து தொடர்ந்து களப்பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

செம்மரத் தொழிலாளர்களுக்காக ஆந்திராவில் சட்டப் போராட்டம் நடத்திவருகிற ஆந்திர மாநில சிவில் உரிமைகள் குழுவைச் சேர்ந்த எம்கே. குமாருடன் கூர்மைச் செய்தி்த் தளம் தொடர்பு கொண்டு கேட்டது.

"செம்மரத் தொழிலாளர்கள் மீதான வழக்குகள் பெரும்பாலும் பொய் வழக்குகளாகவே தாக்கல் செய்யப்படுகின்றது. இதில் பாதிக்கப்படுவது இலாபத்தை ஈட்டுகின்ற முதலாளிகள் அல்ல, மாறாக, அப்பாவி தொழிலாளர்கள் மட்டும்தான்.

"இரு மாநிலங்களுக்கும் இடையிலான தெளிவற்ற சட்ட விதிமுறைகள் இதுபோன்ற வழக்குகளை மேலும் சிக்கலாக்குகிறது. தமிழக கூலித் தொழிலாளர்களுக்கு, ஆந்திராவில் எப்படி பிணை உத்திரவாதம் கிடைக்கும்?

உரிய நேரத்தில் பிணை உத்திரவாதங்கள் கிடைக்காததால் கூலி தொழிலாளர்கள் பிணையில் விடிவிக்க முடியாத சூழலும் தொடர்கிறது.

இதனால் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் பிணை கிடைக்காமல் சிறையிலேயே பல ஆண்டுகளாக உள்ளனர்.

"கைது செய்து சிறையில் அடைக்கும் காவல்துறை அதிகாரிகளும் - வன அதிகாரிகளும் வழக்கு நடத்த முன்வருவதில்லை. அதனால் "விசாரணைக் கைதிகள்" என்ற பேரில் தொழிலாளர்கள் சிறையில் பன்னெடுங்காலமாக வாடும் அவல நிலைக்கு ஆளாகின்றனர்.

"இந்நிலையை மாற்ற இன்னும் நாம் அதிகமாக செயல்பட வேண்டும். குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்கள் – மக்கள் உரிமை அமைப்புகள் இணைந்து செயல்படாமல் அவர்களை நிச்சயம் மீட்க முடியாது." என்கிறார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்கையில்,

"நிலம் இழந்து இயற்கை வளமிழந்து அரசும் - ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளாத நிலையில், பிழைப்புக்கு எந்த கூலி வேலையும் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மலைவாழ் பழங்குடி மக்களை, இடைத்தரர்கள் பயன்படுத்திகொள்கிறார்கள்.

ஆனால், சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்களை ஈடுபடுத்தி, பிரச்சனை உருவானால், இவர்களை அப்படியே விட்டுவிட்டு தப்பிவிடுகின்றனர்.

"தொன்றுதொட்டு பழங்குடி மக்களின் பாதுக்காப்பின் கீழ் இருந்த மேய்ச்சல் மலைக்காட்டு நிலங்களை, மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, 2016 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றமும் வழங்கின அறிவுரைப்படி பழங்குடி மக்களின் நலத் திட்டங்களை முறையாக கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

"இதைத்தான் எல்லா அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் தமிழக அரசிடம் வற்புறுத்தவேண்டும். பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இதுவே தீர்மானகரமான வழியாக இருக்க முடியும்.

இம்மக்களுக்கு தேவையான அனைத்து வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கித் தருவதே அரசின் முதற் கடமையாக இருக்கவேண்டும்." என்றார்.

மார்க்சிய சூழலியல் செயல்பாட்டாளர் அருண் நெடுஞ்செழியன் கூறுகையில்,

"வறுமை, வேலை வாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, சுகாதாரக் கேடுகள் மோசமான பொருளாதார சூழ்நிலை, பசி, பிணி என வாடும் பழங்குடியின மக்கள், தன்னையும் தம்மைச் சார்ந்தோரையும் சாவிலிருந்து மீட்க போராடும்பொழுது, கடத்தல்காரர்கள், இடைத்தரகர்கள், முதலாளிகளின் நயவஞ்சக வலையில் வீழ்ந்துவிடுகின்றனர்.

"இவர்களின் மோசமான இச்சூழ்நிலையை கவனத்தில் கொண்டு விவசாய பாசன வசதியும் ஏற்படுத்தி, 2 ஏக்கர் நிலத்தை வழங்குவது, நல்ல கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை, சாலைகள் மற்றும் மின்சார வசதிகள் செய்து கொடுப்பது போன்ற மாற்று நலத் திட்டங்களை அரசு முன்னெடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு காண முடியும்." என்கிறார்.

20 தமிழர்கள் படுகொலை வழக்கு என்னவானது?

2015 ‘திருப்பதி வனப்பகுதிப் படுகொலைகள்’ என்று சொல்லப்படுகிற ஏப்ரல் 7, 2015 அன்று நடந்த சம்பவத்தில், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில், ஆந்திராவின் கடத்தல் தடுப்புப் படையினரால் 20 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நீதி வேண்டி தமிழ்நாட்டில் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் ஆந்திரா மக்கள் குடியுரிமைக் கழகம் அமைப்பு முன்னெடுத்த சட்டப்போரட்டத்தின் காரணமாக, படுகொலை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு ஆய்வுக் குழு (SPECIAL INVESTIGATION TEAM) நீதிமன்றத்தில் தன்னுடைய ஆய்வறிக்கையை ஆந்திர அரசு நீதிமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

முதலில், இவ்வழக்கை நேரடியாக கண்காணித்த நீதிமன்றம் பின்னர் வேகத்தை குறைத்துக்கொண்டது என்ற குற்றச்சாட்டும் பரவலாக காண முடிகிறது.

இருபது தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டு மூன்றாண்டு நிறைவடைந்தும், இதுவரை ஒருவர் கூட வழக்குத் தொடர்பாக கைது செய்யப்படவில்லை.

அதேபோன்று, 2013 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில், செம்மரக் கடத்தல் கும்பல்களால் இரு வனத்துறையினர் சேசாசல வனப்பகுதியில் கொல்லப்பட்ட அடுத்த 72 மணி நேரத்தில், 360 தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திர காவல்துரையினரால் கைது செய்யப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இரண்டாண்டுகளுக்கு மேலாக ஆந்திர சிறையில் இன்றுவரை வாடுகின்றனர்.

2011 ஆம் ஆண்டில் வாரதி என்ற கூலித் தொழிலாளரை சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறை.

2012 ஆம் ஆண்டில் முருகன், சுப்பிரமணி என்ற இரு கூலித் தொழிலாளர்கள், செம்மரம் வெட்டிய பொழுது ஆந்திர காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியது.

2013 ஆம் ஆண்டில் தமிழக கிராமங்களில் இருந்து பிடித்து கொண்டு சென்று ஏழு தொழிலாளர்களை காட்டிற்குள் வைத்து சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறை.

2018 பிப்ரவரி 19 , தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இனத்தவர் 5 பேரை ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட ஒண்டிபிட்டா ஏரியில் கொன்று மிதக்க வைத்தது ஆந்திர காவல்துறை.

தருமபுரி மாவட்டம் அரூர் சித்தேரி மலை தோல்தூக்கி கிராமத்திலிருந்து கூலி வேலைக்காக ஆந்திரா சென்ற வெங்கட்ரமணாவை அடித்து கிணற்றில் வீசியுள்ளனர்.

தொடர்ச்சியாக, இப்படி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாவதும் நடந்து வரும் நிலையில், மனித உரிமை அமைப்புகள் ஆவணங்களை உருவாக்குவதோடு தங்கள் கடமைகளை முடித்துக்கொள்வதும், சமூக, அரசியல் இயக்கங்கள் அவ்வப்பொழுது சீறிப்பாய்ந்துவிட்டு வேறு திசையில் பயணிப்பதுமாக இருக்கிறது.

மண், நீர், மலை, காடுகள் என அனைத்தும் சார்ந்த உரிமைகளை இழந்து நிற்கும் தமிழகம், மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் சுட்டுக்கொல்லப்படுவதிலும் பழங்குடித் தமிழர்கள் ஆந்திரக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்படுவதையும் தடுக்கும் வல்லமை என்று பெறும்?