இலங்கையின் மலையகத்தில்

போதைப்பொருள் ஒழிப்புப் போராட்டத்தை நடத்திய தமிழ் இளைஞன் கொலை-இரத்தினபுரியில் சம்பவம்

மக்கள் ஆர்ப்பாட்டம், இலங்கைப் பொலிஸார் மீது சந்தேகம்
பதிப்பு: 2018 செப். 21 21:10
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 22 21:32
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் மலையகத்தில் போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெள்ளிக்கிழமை இரத்தினபுரி பாமன்கார்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கைப் பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் மூன்றரை மணிநேரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இளைஞன் கொலை செய்யப்பட்டபோது கடமையிலிருந்த இலங்கைப் பொலிஸார் ஒருவரும் கொலையின் பிரதான சூத்திரதாரியும் தலைமறைவாகியுள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்குத் தேவையான உடைகளை அவர்களின் வீடுகளில் இருந்து சிலர் எடுத்துச் சென்றுள்ளனர்.
 
ஆகவே குற்றவாளிகளை இலங்கைப் பொலிஸார் காப்பாற்றுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞனின் குடும்ப உறவினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகின்றனர்.

எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடக்கூடாதென குடும்ப உறவினர்களிடம் இலங்கைப் பொலிஸார் அச்சுறுத்தி உறுதிமொழியை பெற்றுள்ளனர்.

அதனையடுத்தே கொல்லப்பட்ட இளைஞனின் சடலம், பிரதேப் பரிசோதனையின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கையளிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

கொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கங்களும் கண் கண்ட சாட்சியங்களும் இருப்பதால் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும், அரசியல் பிரதிநிதிகளிடம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, குற்றவாளிகளைக் கைது செய்து விசாரணை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சிலர் தமக்கிடையே வாக்குவாதப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

கொலைக் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் இருவரின் வீடுகளை ஆத்திரமடைந்த மக்கள் அடித்து நொருக்கியுள்ளனர். மூன்று முச்சக்கர வண்டிகளும் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதனால் பிரதேசத்தில் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் வியாபாரத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்த 36 வயதான தனபால் விஜேரத்னம் என்ற இளம் குடும்பஸ்த்தர் ஒருவரே நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் இரத்தினபுரி பொலிஸார் கூறுகின்றனர்.

ஆனால், உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கொலையுடன் சம்மந்தமில்லாத இருவரையே இலங்கைப் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

நிலமையைக் கட்டுப்படுத்த இரத்தினபுரி பாமன்கார்டன் பிரதேசத்தில் பெருமளவு இலங்கைப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் போதைப் பொருட்களை இலங்கைப் பொலிஸாரின் உதவியுடன் அரசியவ்வாதிகள் சிலர் விநியோகித்து வருவதாக பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டம் இலங்கையின் சபிரகமுவா மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.