தூத்துக்குடி மக்கள் பிரச்சனைக்கு சென்னையில் கருத்துக் கணிப்பா?

ஸ்டெர்லைட் ஆலை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!

தருண் அகர்வால் குழுவையும் ரத்து செய்ய போராட்டக் குழு கோரிக்கை!
பதிப்பு: 2018 ஒக். 04 16:47
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஒக். 07 12:38
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாட்டை, தமிழ்நாடு அரசு 28.05.2018 அன்று முடக்கியதன் தொடர்ச்சியாக, வேதாந்தா குழுமம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்து நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழுவை ரத்து செய்து விட்டு, பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், ஒக்டோபர் 5, 6 நாட்களில் சென்னையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளதையும் சுட்டிக்காட்டி, தூத்துக்குடியில் இருந்து 600 கி.மீ கடந்து சென்னையில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளதையும் எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தினர் முறையிட்டுள்ளனர்.
 
இதுகுறித்து, தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் கூர்மை செய்தித்தளத்திற்கு தங்கள் தரப்பு விளக்கத்தைத் தெரிவித்தனர். கிழே காண்க:

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தமிழ்மாந்தன், "ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆய்வுக்குழுவில் இடம்பெறக்கூடாது என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை எப்படி பசுமைத் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது? என தெரியவில்லை.

"நச்சு ஆலையான ஸ்டெர்லைட் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 600 கி.மீ தள்ளியுள்ள சென்னையில் பொது மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை சட்ட விதிகளுக்குப் புறம்பாக நடத்துவது எதற்கு?

"சென்னையில் பொது மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட இருப்பதே, இவர்களின் நேர்மையை காட்டுகிறது. தனது நோக்கத்திலிருந்து நடுநிலைத்தவறி, ஆலைக்கு சாதகமாக நடக்கும் செயலாகவே இதனைப் பார்க்க முடியும்" என கூறியுள்ளார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லூர்து மேரி (அச்சுறுத்தல் காரணமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது),

"எங்கள் பிள்ளைகளை நோய் தாக்கிக் கொன்று குவித்த, இன்றும் பல உயிர்களைக் கொன்றுக் குவித்துக்கொண்டிருக்கும் இந்த நாசகார ஆலையை எதிர்த்து அறவழியில் போராடி 13 அப்பாவி உயிர்களை இழந்திருக்கிறோம். இழந்த உயிர்கள் போதாதா? இன்னும் இந்த கொலைக்கார அரசுக்கு எங்களின் எத்தனை உயிர்கள் வேண்டுமாம்?

"வெறும் 2 மணி நேரத்தில் ஆய்வு செய்த இந்தக் குழு தன்னுடைய ஆய்வை முழுமையாக எப்படி செய்திருக்க முடியும்? உண்மையில் அவ்வாலையால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை அக்குழு தனித்தனியாக கேட்டு ஆவணப்படுத்திருக்க வேண்டும்.

"ஆனால் அவ்வாறு அது செய்யவில்லை. ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள காற்று, நிலத்தடி நீர், கடல்வளம், உப்பள உற்பத்தி பாதிப்பு, கேன்சர் உள்ளிட்ட உயிர்க்கொல்லும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பற்றியும் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், மக்களிடம் மனுக்கள் பெற்றது, அவர்களை ஏமாற்றி திசை திருப்பும் வேலையாகப் பார்க்கிறோம்.

"பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வேண்டும்; அந்த நீதி என்பது இந்த ஆலையை இழுத்து முடிவதேயாகும்" எனக் கூறினார்.

சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து வழக்குரைஞர் லெனின் கூறுகையில்,

"இந்த ஆய்வுக் குழு மக்களிடம் பெற்ற மனுக்களைக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது எனத் தெரிந்தும் மக்களைத் தவறாக வழி நடத்துகிறது என்பதே எங்கள் வாதம். உறுதியாக, இந்த ஆய்வுக்குழு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே செயல்படும். எனவே, பசுமைத் தீர்ப்பாயம் இந்த ஆய்வுக் குழுவை ரத்து செய்துவிட்டு, தூத்துக்குடி வட்டார மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.

"தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை நாங்கள் ஏற்கவில்லை, தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் குறித்த அரசாணையை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கு அளித்த அனுமதியை ரத்து செய்து விட்டு, வேதாந்தா நிறுவனத்தின் பணியாளர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

"ஆலை விவகாரத்தில் அரசு தன்னுடைய இரட்டை வேடத்தைக் கைவிட்டு விட்டு, ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக மாசு கட்டுப்பாட்டுத் துறையால் 'மிக ஆபத்து மிகுந்த அடர்சிவப்புத் தொழிற்சாலை' என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்ட தாமிர உருக்காலையைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் அதற்கான சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த 20 வருடங்களாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருகின்றனர். பலகட்டப் போராட்டங்களில் தீர்வு கிடைக்காததால்,பெருந்திரள் மக்கள் ஒன்றுகூடி அறவழிப்போராட்டத்தை, 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில், தன்னெழுச்சியாக ஒருங்கிணைத்தனர்.

மே 22, 2018, நூறாவது நாளன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க பேரணியாக வந்த நிராயுதபாணியான மக்கள் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தி 13 உயிர்களை படுகொலை செய்து தமிழ்நாடு காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. (இது குறித்து கூர்மையில் தொடர்ச்சியாக பல்நோக்கு செய்திக் கட்டுரைகள் மே மாதம் 2018இல் வெளியிட்டுருந்தோம்).

இதன் பின்னும் அடங்கி ஒடுங்காது மீண்டும் துணிந்து போராடிய தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக, உலகம் முழுதும் உள்ள தமிழ்நாட்டு தமிழர்கள், ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் குதித்ததன் காரணமாக ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து (அரசாணை 28.05.2018), ஆலையின் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சட்ட ரீதியாக போராடி இதனை கடந்துவந்து மீண்டும் ஆலையை இயங்க வைப்போமென, வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆலை மூடப்படுவதை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் ஜீலை 3, 2018 இல் வழக்கும் தொடுத்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுப் பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஆய்வுக் குழுவொன்றை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

தருண் அகர்வால் தலைமையிலான குழுவானது கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி அன்று கருத்துக் கேட்பு கூட்டத்தில், பொது மக்களிடம் ஆலை குறித்த புகார் மனுக்களையும் பெற்றது. பின்னர், ஆலை இயங்கிவந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியது. அதனை தொடர்ந்து இந்த மாதம் 5, 6-ஆம் தேதிகளில் சென்னையில், மக்களிடம் கருத்து கேட்பதாகத் தெரிவித்திருக்கிறது.