வடமாகாணம்

முல்லைத்தீவில் கேப்பாப்புலவு, முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் இலங்கைப் படையினர் நிரந்தர முகாம்களை அமைக்க முயற்சி

முழுமையாக மீளக்குடியமர முடியாத நிலையில் மக்கள்
பதிப்பு: 2018 ஒக். 05 15:15
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 05 21:01
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்கும் மையப்பகுதியில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிரதேசத்தில் அறுநுாற்றிப் 17 ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கைப் படையினர் நிலை கொண்டுள்ளனர். அதேவேளை, முல்லைத்தீவு முள்ளிவாய்ககாலில் மிகவும் பெரியளவிலான காணிகளைக் கொண்டமைந்த கோட்டபாய கடற்படை முகாம் நிரந்தர முகாமாக மாற்றியமைக்கப்படக் கூடிய வாய்ப்புகளே அதிகமாக உள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் நிலப்பரப்புக்களை கூறுபோட்டு சிங்களக் குடியேற்றங்களை 1983இல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்ன ஆரம்பித்து வைத்தார். அந்தப் பணியை மைத்திரி- ரணில் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவம் அபகரித்து வைத்துள்ள காணிகளில் நான்காயிரத்து 859 ஏக்கர் காணிகள் மாத்திரமே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

1983ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் காரணமாக தமிழ் மக்கள் முல்லைத்தீவில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பல்லாயிரம் ஏக்கர் காணிகளில் இருந்து இடம்பெயர்ந்தனர்.

அதன் பின்னர் சுமார் ஏழாயிரத்து 750.75 ஏக்கர் காணிகளை இலங்கைப் படையினர் அபகரித்திருந்தனர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் மக்கள் மீளக்குடியமர ஆரம்பித்தனர்.

முல்லைத்தீவு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொ்ந்ததமான ஜந்து ஏக்கர் காணியில் சிவாலயம் ஒன்று பரம்பரையாக இருந்துள்ளது. இந்த சிவாலயம் பஞ்சாங்கத்திலும் பதிவாகியுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். ஆனால் குறித்த சிவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடமுடியாத நிலையில் இலங்கைப் படையினர் அங்கு நிலைகொண்டிருந்தனர். பயிர்செய்கையிலும் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள அரசமரத்தின் கீழ் புத்தர் சிலை ஒன்றையும் வைத்திருந்தனர். ஆனாலும் தொடர்ச்சியான அழுத்தங்களினால் இலங்கைப் படையினர் 25.06.18 அன்று காணியை உரியவரிடம் கையளித்துள்ளனர்.

ஆனாலும் இதுவரை தமிழ் மக்களின் பாரம்பரியக் காணிகள் கையளிக்கப்படவில்லை. மைத்திரி- ரணில் அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்ததில் இருந்து கொழும்பில் இயங்கும் இலங்கை வனவளத் திணைக்களம், இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள், இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்களின் காணிகளை தொடர்ச்சியாக சுவீகரித்து வருகின்றனர்.

காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் இருந்தபோதும் அதிகாரிகள் அதனைப் பொருட்படுத்துவதில்லை என முல்லைத்தீவு செயலகத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.

மணலாறு எனப்படும் வெலிஓயா தவிர்ந்த ஏனைய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள ஏழாயிரத்து 750.75 ஏக்கர் காணிகள் இலங்கைப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் சிலர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

ஆனாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் சரியான மதிப்பீடுகளைச் செய்ய முடியாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் முல்லைத்தீவு மாவட்ட செயலக மதீப்பீட்டின் பிரகாரம், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவில் 169 ஏக்கரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 186 ஏக்கரும் கரைதுரைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் நான்காயிரத்து 45 ஏக்கரும் மாந்தை கிழக்குப்பிரதேச செயலாளர் பிரிவில் 30 ஏக்கரும் துணுக்காய் பிரதேசசெயலாளர் பிரிவில் 429 ஏக்கரும் என நான்காயிரத்து 859 ஏக்கர் காணிகளை இலங்கைப் படையினர் அபகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. இதனால் சிங்கள் குடியேற்றங்களைச் செய்வதில் கொழும்பில் உள்ள அரச முகாமைத்துவம் முழு மூச்சுடன் செயற்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனா்.

முல்லைத்தீவில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டும் நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களை உள்ளடக்கிய புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில், இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன், இலங்கை அரச திணைக்களங்களினால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டயர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.