அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளையடுத்து

சீனாவின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்- இந்து சமுத்திரத்தின் கேந்திர மையம் என்கிறார் அமைச்சர் ஹர்ஷ

வல்லரசு நாடுகளையும் உள்ளடக்கிய சர்வதேச மாநாடு கொழும்பில்
பதிப்பு: 2018 ஒக். 05 21:30
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 06 21:05
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அமெரிக்கா, ஜப்பான். இந்தியா ஆகிய நாடுகளின் போர்க் கப்பல்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து கொழும்பு, திருகோணமலைத் துறைமுகங்களுக்கு வந்து சென்றுள்ள நிலையில், சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் (Submarine Support Ship) நேற்று வியாழக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்தக் கப்பலின் வருகை நல்லெண்ண பயணம் என கொழும்பில் உள்ள சீனத்துாதரகம் கூறியுள்ளது. இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்து செல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார். அது நல்லெண்ண அடிப்படை என்றும் அவர் கூறியிருந்தார்.
 
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே அவ்வாறு கூறியதையடுத்து ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவைக் கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் செப்ரெம்பர் 13 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தன.

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கிடையிலும் அமெரிக்கா போன்ற நாடுகளோடும் கலந்துரையாடலில் ஈடுபட்டு புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்வதே இலங்கை அரசின் நோக்கம் என்கிறார் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா.

அதனையடுத்து ஜப்பான் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் சென்ற 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தன.

ககா (Kaga) நாசகாரிக் கப்பலான, இனாசுமா (Inazuma) ஆகிய இரண்டு போர்க்கப்பல்களே கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து நேற்று வியாழக்கிழமை சென்றுள்ளது.

இந்த நிலையில் ஏட்டிக்குப் போட்டியாகவே சீனக் கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது. நான்கு நாட்கள் கொழும்புத் துறைமுகத்தில் தங்கி நிற்கவுள்ளது.

Type 926 ரகத்தைச் சேர்ந்த ஓசன் லான்ட் (Ocean Island) (864) என்ற இந்த நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல், 135 மீற்றர் நீளத்தையும், 18.6 மீற்றர் அகலத்தையும் கொண்டது.

சீனாவின் இந்தக் கப்பலில், விநியோக ஆதரவு, நீர்மூழ்கிகளைப் பழுதுபார்க்கும் தன்மைகளைக் கொண்டது. அத்துடன் செயலிழந்த நீர் மூழ்கிகளை கடலுக்கு அடியில் இருந்து மீட்கக்கூடிய நவீன வசதிகளும் உண்டு. நீர்மூழ்கி வாகனங்களும் இந்தக் கப்பலில் உள்ளது.

அதேவேளை, இந்தியாவின் மூன்று கப்பல்கள் கடந்த செப்ரெம்பர் மாதம் ஏழாம் திகதி திருகோணமலைத் துறைமுகத்துக்கு வருகை தந்திருந்தது.

கிரிச் (Kirch), சுமித்திரா (Sumitra), ஹோறா தேவ் (Cora Divh) என்ற மூன்று போர்க் கப்பல்களே செப்ரெம்பர் மாதம் ஏழாம் திகதி முதல் செப்ரெம்பர் 13 ஆம் திகதி வரை தங்கி நின்று இலங்கைக் கடற்படையுடன் இணைந்து பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தன.

திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன.

இந்த ஆய்வுக்காக பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் ஒன்றும் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்திருந்தது.

இந்த நிலையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் பெற்றுள்ளதாக இலங்கைத் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியள்ளார்.

இதன் காரணத்தினால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பலம்வாய்ந்த நாடுகளுடன் உறவைப் பேனுவது பிரதான நோக்கம் எனவும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கிடையிலும் அமெரிக்கா போன்ற நாடுகளோடும் கலந்துரையாடலில் ஈடுபட்டு புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்வது இலங்கை அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளாார்.

இந்து சமுத்திரம் - எமது எதிர்காலத்தை வரையறுத்தல் என்ற தொனிப்பொருளில் ஜப்பான், சீனா, இந்தியா ்உள்ளிட்ட பல்வேறு இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளும் அமெரிக்கா போன்ற நாடுகளும் பங்குகொள்ளும் சர்வதேச மாநாடு எதிர்வரும் 11, 12 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த சர்வதேச மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளார் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடை்பெற்றபோது ஹர்ஷ டி சில்வா இவ்வாறு கூறினார்.

ஆனால், வல்லரசு நாடுகளின் போட்டிக் களமாக இலங்கை மாறியுள்ளது என்றும் மைத்திரி- ரணில் அரசாங்கம் தமது சொந்த அரசியல் நோக்கில் இவ்வாறு செயற்படுவதாகவும் ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரத்னாயக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை, 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, சீனா போன்ற வல்லரசுகள் தமது அரசியல் பொருளாதார நோக்கில் இலங்கையைப் பயன்படுத்தி வருவதாக ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிதுங்க ஜயசூரிய கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் அடுத்த ஆண்டு அல்லது 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் இந்த நாடுகளின் இலங்கை மீதான அணுகுமுறையில் மாற்றங்கள் இருக்காதென அவதானிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக சீனாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் ஒரே புள்ளியில் நின்று இலங்கை மீது கடுமையாக ஆதிக்கம் செலுத்தும் எனவும் ஆனாலும் சீனாவுடனான பொருளாதார உறவுகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இலங்கை தக்க வைக்கும் என்றும் அவதானிகள் கூறியுள்ளனர்.

சீனா தவிர்ந்த அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் ஈழத் தமிழர் விவகாரத்தையும் தமக்கு ஏற்ற முறையிலான தன்மையுடன் அணுகும் என்றும் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.