தமிழர் தாயகம் முல்லைத்தீவு

செம்மலையில் இலங்கை வன இலாகாவின் பிடியில் மக்களின் காணிகள்- திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம்

விரைவாகத் தடுக்க வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம்
பதிப்பு: 2018 ஒக். 05 22:48
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 07 12:39
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இன அழிப்புப் போரின் 2009 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில் ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு- கிழக்கு பகுதிகளில் உள்ள வளங்கள் உட்பட காணிகள் சூறையாடப்பட்டு அவற்றை அபகரிக்கும் முயற்சி திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே, முல்லைத்தீவு - செம்மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான நுாறு ஏக்கர் விவசாய நிலமும் வனவள திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 133 அமர்வி்ன் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் இதனைக் கண்டித்து விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்ததார். பிரேணை இலங்கை வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கும் ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
 
வனஇலாகா திணைக்களம் தாங்கள் நினைத்தவாறு எதுவும் செய்யலாம் என்ற தோரணையில் காடுகளை அழித்து காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றுவதாகவும் பிரேரணையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கள மக்களுக்கு காணிகளையும் வழங்குவதோடு, பூர்வீக உரிமையாளர்களான தமிழர்களது காணிகளைப் பறிப்பது தான் முல்லைத்தீவில் இலங்கை வனஇலாகா திணைக்களத்தின் செயற்பாடாக காணப்படுகின்றது.

அத்துமீறி வந்தவர்களுக்கு இது வந்த நிலம், ஈழத் தமிழ் மக்களுக்கு இது சொந்த நிலம் என்று உணர்ச்சி பொங்க ரவிகரன் கருத்து வெளியிட்டார்.

2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் 15 ஆயிரத்து 356 ஏக்கர் காணிகளுக்கு தாம் எல்லையிட்டுள்ளதாக இலங்கை வனஇலாகா அதிகாரிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கூறியிருந்தனர்.

எனினும் இந்த ஏக்கர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என ரவிகரன் சந்தேகம் வெளியிட்டார்.

4035 குடும்பங்களின் வாழ்வாதாரம் உட்பட 13 ஆயிரத்து 232 ஏக்கர் நிலங்களும் இதற்குள் உள்ளடங்கும் எனவும், செம்மலை மக்களின் வாழ்வாதாரத்திற்குரிய நிலங்கள் புளியமுனை பகுதியில் உள்ளதாகவும் 1972 ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் உப உணவுப் பயிர்ச்செய்கையை இந்தக் காணிகளிலேயே செய்து வந்தார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

இன அழிப்பு போர் நடைபெற்ற 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இங்கு பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலை காணப்பட்டது. கிட்டத்தட்ட 35 வருடங்களின் பின்னர் தற்போது இங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த மாதம் அப் பகுதிக்கு சென்ற இலங்கை வனஇலாகாவினர் முன்பு எல்லையிட்டிராத இந்த இடங்களில் ஆங்காங்கே ஒழுங்கீனமற்ற முறையில் F என்ற அடையாளங்களை இட்டு இந்த இடங்களுக்குள் நுழையக் கூடாதெனவும் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்கள்.

இவ் அறிவித்தலால் 40 குடும்பங்களின் 100 ஏக்கர் வரையிலான காணிகளில் தொழில் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது கருத்து வெளியிட்டார்.

இன்னும் இரண்டு வார காலத்திற்குள் கச்சான், சோளன் ஆகியன பயிரிடவேண்டிய நிலையில், இத்தடுப்பானது மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதுடன் கடந்த 1ஆம் திகதி அங்கு சென்று மக்களுடன் குறித்த இடங்களை பார்வையிட்டதாக சுட்டிக்காட்டினார்.

இக்காணிகள் சிலவற்றுக்கு ஆவணங்கள் உள்ளதாகவும் ஒவ்வொரு காணிகளிலும் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் உள்ளதுடன் அவை ஏற்றுக்காவல் மற்றும் நிழலுக்காக முன்பு தொடக்கம் இருந்தவை எனவும் மக்கள் தெரிவித்தார்கள்.

கடந்த மூன்று வருடங்களாக தாம் உப உணவுப் பயிர்ச்செய்கை செய்து வரும் நிலையில் இதனை ஏற்றுக்கொண்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் வழங்கிய சிபார்சின் அடிப்படையில் விவசாய கிணறுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றைப் பார்வையிட்டு பிரதேச செயலருக்கும் தெரியப்படுத்தியதாகவும் தான் இந்தியா செல்வதாகவும் வந்ததும் இதுகுறித்து ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயத்தில் அனைவரும் விரைந்து கவனம் செலுத்தி கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடப்பட்டுக்கொண்டிருக்கும் வளங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போர் நிறைவுபெற்ற பின்னர் ஈழத்தமிழ் மக்கள் அவர்களது பூர்வீக நிலங்களில் முழுமையாக குடியமர்த்தப்படாத நிலையில், குறித்த மக்களது காணிகளை வனஇலாகா திணைக்களத்தினர் பல்வேறு சாட்டுப்போக்குகளின் அடிப்படையில் அபகரிக்கின்றமை அதிகரித்து வருகின்றது.

இந்தச் செயற்பாடானது கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் மௌனமாக மேற்கொள்ளப்படுகின்றது.

எனினும் இந்த விடயம் குறித்து அரசியல்வாதிகளிடம் முறையிடுகின்றபோதிலும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் விரைந்து செயற்படுவதில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

அத்துடன் யுத்தத்தினால் அனைத்து உடைமைகளையும் இழந்துவிட்டு பூச்சியத்திலிருந்து தமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ள நிலையில், தமது காணிகளையும் இலங்கை வனஇலாகா திணைக்களம் அபகரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.