2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் ஏமாற்றிய நிலையில்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் நோக்கி நடை பவனி

கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கு மாகாணத்தில் துண்டுப்பிரசுரம்
பதிப்பு: 2018 ஒக். 09 11:05
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 09 12:19
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வழக்கு விசாரணைகளின்றி இலங்கைச் சிறைச்சாலைகளில் பத்து வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அநுராதபுரம் நோக்கி மாபெரும் கண்டப்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒன்றுகூடிய மாணவர்கள், அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் கண்டனப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன் தலைமையில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
 
இந்தக் கண்டனப் பேரணி, ஏ9 வீதியுடாக கிளிநொச்சி, வவுனியா ஊடாக அநுராதபுரத்தை சென்றடையவுள்ளது.

இதில் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதுடன், இவர்களுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல், விவசாய, தொழிநுட்ப பீட மாணவர்கள் மற்றும் வவுனியா வளாக மாணவர்களும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றுள்ள மாணவர்கள், இதுதான் உங்கள் நல்லாட்சியா?, சிங்கள அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதி, நிபந்தனையின்றி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய் என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு அநுராதபுரம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 அளவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபவனி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சகல அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனே இரத்துச் செய், மேலும் அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம் என்பன போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் கிழக்கு மாகாணத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

கைதிகள்-09
யாழ் பல்கலைகழக மாணவர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக உறுதியளித்திருந்தது. விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களில், நான்கு தடவைகளுக்கு மேல் இலங்கைச் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டங்களில் கைதிகள் ஈடுபட்டிருந்தனர். கைதிகள் மரணிக்கும் நிலையில், உறுதிமொழிகளை வழங்கி ஏதோவொரு வழியில் உண்ணாவிரதப் போராட்டங்களை இலங்கை அரசாங்கம் நிறுத்திவிடும். பின்னர் விடுதலை செய்வதற்கான எந்தவொரு முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை. இதனை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி கண்டப் பேரணிகளை நடத்தியிருந்தனர். 107, அல்லது 137 தமிழ் அரசியல் கைதிகள் இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அருட்தந்தை சத்திவேல் கூறுகின்றார். ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் சரியான எண்ணிக்கைகளை இலங்கைச் சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிடவில்லை என்றும் அருட்தந்தை கூறியுள்ளார்.

சம உரிமை இயக்கம் எனும் பெயரில் மட்டக்களப்பு நகர், மஞ்சந்தொடுவாய், ஊறணி, நாவற்குடா போன்ற இடங்களில் இவ்வாறான வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் மதில் சுவர்களிலும், பொது இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இவ்வாறான கருத்துகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் இதுவரை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத நிலையில் போராட்டங்கள் தொடருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.