நாளை மீண்டும் கூடுகின்றது இலங்கை நாடாளுமன்றம்

நாளைய அமர்வையும் புறக்கணிக்கப்போவதாக ஹெகலிய ரம்புக்வெல எச்சரிக்கை

இலங்கையின் செயற்பாடுகள் குறித்து சர்வதேசம் அதிருப்தி
பதிப்பு: 2018 நவ. 18 11:47
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 18 18:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றினை கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்பதை அடிப்படையாக வைத்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஏனைய விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் வெகுவிரைவில் இது குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற நடைமுறைகள் அனைத்தையும் புறக்கணித்துள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி சபாநாயகரை நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வையும் தாம் நிராகரிப்போம் எனவும் சபாநாயகர் உரிய முறையில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் வரை அனைத்து அமர்வுகளையும் நிராகரிக்கப்போவதாகவும் ஹெகலிய குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச நாடுகள் உட்பட அனைத்து தரப்பினரும் விசனம் வெளியிட்டுவரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களது செயற்பாடு அனைவராலும் கேலியாக உற்றுநோக்கப்படுகின்றது.

கடந்த 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற செயற்பாடு உலக நாடுகளால் பெரிதும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நாளை திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிப்போம் என ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை ஏனைய கட்சியினருக்கு எச்சரிக்கை விடுக்கும் ஒன்றாக உள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தன்னிச்சையாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்படாத நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வை அடுத்து மகிந்த பிதமராக பதவி வகிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சபாநாயகரின் அறிவிப்பு செல்லுபடியற்றது என தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி சிறிசேன இதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் ஹெகலிய ரம்புக்வெல விடுத்துள்ள அறிவிப்பு நாளைய நாடாளுமன்ற அமர்வில் எவ்வகையான தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

அதேவேளை, சபை அமர்வு குறித்து கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி இன்றிரவு அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டமும் இன்றிரவு அல்லது நாளை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.