இலங்கை நாடாளுமன்றத்தில் தொடரும் நெருக்கடி

புதிய பிரதமரைத் தெரிவுசெய்யுமாறு சர்வகட்சிக் குழுக்கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன பரிந்துரை

நாளை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளதாக ரணில் உறுதி
பதிப்பு: 2018 நவ. 18 21:22
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 18 21:57
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நாடாளுமன்றத்திற்கு புதிய பிரதமர் ஒருவரை தெரிவு செய்யுமாறும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி செயற்பட்டு ஒரு முடிவைக் காண்போம் என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று இடம்பெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க மாட்டேன் எனவும் ஆனால் இப்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வைக் காண பல யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு தான் முன்வைத்துள்ளதாகவும் எனினும் அவை ஒன்றும் நிறைவேறவில்லை என குறிப்பிட்டதுடன் தான் கூறியவாறு நாடாளுமன்றத்தில் எதுவும் இடம்பெறவில்லை எனவும் புதிய பிரதமர் ஒருவரை தெரிவுசெய்து நாடாளுமன்ற ஒழுங்குகளுக்கு ஏற்ப செயற்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
 
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வகட்சி சந்திப்பு இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது.

கடந்த ஒக்ரோபர் 26 ஆம் திதி இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடனேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தழைப்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது நாடாளுமன்றத்தில் மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நாளை திங்கட்கிழமை நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய சர்வகட்சி கூட்டத்மின் போது குறிப்பிட்டதாக ஊடகவியலார் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு உறுதிப்படுத்தினார்.

இதேவேளை தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பற்றி நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் கூட இல்லையென மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் அப்படியாயின் எப்படி இவர்கள் சபை நியமங்களின்படி நடந்தார்கள் என்று நம்புவது எனவும் கேள்வியெழுப்பியதாக குறித்த ஊடகவியலாளர் கூறினார்.

நாளை திங்கட்கிழமை 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அந்த உறுப்பினர்கள் சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு கொண்டு வந்து தரமுடியும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனை இங்கு மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொள்ளப்படவில்லை என கூறப்படுின்றது.

அதேவேளை முடிந்தால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று சவால் விடுத்துள்ளார்.

எனினும் ஏற்கனவே அறிவித்ததற்கு அமைவாக மக்கள் விடுதலை முன்னணியினரும், சபாநாயகர் கரு ஜயசூரியவும் இந்தச் சந்திப்பை புறக்கணித்து கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.