அரசகள் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையே!

மக்களின் பெருந்திரள் எழுச்சியே தீர்வினைப் பெற்றுத்தரும் - சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன்

இந்தியச் சிறைகளின் மறைக்கப்பட்ட முகம் முதல் தமிழக சமூக செயற்பாட்டுக்களம் வரை விரிவான அலசல்
பதிப்பு: 2018 நவ. 19 03:06
புதுப்பிப்பு: நவ. 23 15:31
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்தியச் சிறைகள் 'சித்திரவதைக் கூடங்களாக' செயல்படுவதாக பலதரப்பட்ட மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு காலக்கட்டங்களில், அரசியல் கைதிகளே கூட உளவியல் நெருக்கடிக்கு உள்ளாவதும், தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதும் நிகழ்ந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சூழலியல் செய்ற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் உள்ளிட்ட பலரும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகாவும் செய்திகள் வந்தன. ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் அவர்களிடம் இதுகுறித்தும் தமிழக சமூக செயற்பாட்டுக் களம் குறித்தும் கூர்மை செய்தித்தளம் விரிவான அலசலை மேற்கொண்டது.
 
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலான சிறைவாசத்தின் பின்னர், பிணையில் சமீபத்தில் வெளியே வந்துள்ளார். சிறைக்கு செல்வதற்கு முன், காவிரிப்படுகையில் நடக்கும் மணல் கொள்ளைக்கு எதிராக பெருந்திரள் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், நியூட்ரினோ என பல்வேறு போராட்டங்களில் நேரடியாக களம் கண்ட அனுபவம் கொண்டவர் முகிலன்.

கூர்மையின் கேள்வி: பல ஆண்டுகளாக பல்வேறு போராட்ட வழக்குகளில் சிறை சென்றுள்ளீர்கள். கடந்த முறைக்கும் இம்முறைக்குமான வேறுபாடாக எதனை பார்க்கிறீர்கள்? ஆம்! கடந்த முறைகளுக்கும், தற்போதும் உள்ள வேறுபாடு என்பது நீண்ட கால சிறைவாசம், கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் 2012-ல் 83 நாட்கள் (மார்ச் 1- சூன் 9) இருந்தது தான் நீண்ட கால சிறைவாசமாக இருந்தது. தற்போது 374 நாட்கள் இருந்துள்ளேன்.

மாறுபாடு என்பது இதுவரை சிறையில் எனது உரிமைகளை பறிக்க வெளிப்படையாக சிறை நிர்வாகம் முயற்சித்தது இல்லை. ஆனால் இந்த முறை சிறைவிதிகளுக்கு புறம்பாக அப்பட்டமாக என்னை தனிமை சிறை- சுகாதாரமற்ற அறை- பயன்படுப்படாத தொழுதி- பல்லாயிரம் கொசுக்களுக்கிடையே வாழ்க்கை- திறந்த வெளி மலக்கிடங்கு, தங்கும் அறைக்கு வெளியே என என்னை சிறையில் வைத்தே கொசுக்களால் டெங்கு, சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல் என ஏதாவது நோயை ஏற்படுத்தி கொல்லும் முயற்சியில் ஈடுபட்டது அப்பட்டமாக தெரிந்தது. அதையும் சிறையில் போராடி முறியடித்து தற்போது உயிரோடு வெளியே வந்துள்ளேன்.

கூர்மையின் கேள்வி: இந்திய சிறைகளில் உளவியல் சித்திரவதை முதல் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடரும் என பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்த உங்கள் பார்வை மற்றும் நேரடி அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியுமா?

பொதுவாக போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு வருபவர்களை சிறை நிர்வாகம் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மிகக்குறைவு. போரட்டக்காரர்களுக்கு, களச் செயற்பாட்டாளர்களுக்கு தேவையற்ற பிரச்சனை கொடுத்தால் சிறையில் தாங்கள் நடத்தும் சட்ட விரோத கொள்ளைகள் வெளியில் அம்பலமாகி விடும் என பயந்து சிறைவிதிப்படி நடத்தவே முயற்சிப்பார்கள்.

ஆனால் சமீப காலங்களில் என்னை சிறைக்குள் வைத்து நோய் ஏற்படுத்தி கொல்ல முயற்சித்து, திருமுருகன், பியுஸ் மானுவி, வளர்மதி ஆகியோருக்கு பெரிய உளவியல் சித்ரவதையை நடத்தி வெளியில் களத்தில் இருக்கும் போராட்டக்காரர்களுக்கு சிறை அச்சத்தை ஏற்படுத்துவது, சிலரை மேலும் சிறை பற்றிய அச்சத்தால் சமூக செயல்பாட்டில் இருந்து துண்டிக்க வைக்க முயற்சிப்பது என்பது தான் நோக்கமாக உள்ளது.

நான் இருந்த சிறைகளில் உணவு, தண்ணீர், தங்குமிடம் ஆகியவற்றில் மற்ற சிறையிலிருக்கும் எனக்கும், எவ்வித பாரபட்சமும் காட்ட நான் அனுமதித்தது இல்லை. மதுரை சிறையில் தற்போது ஜீலை 1 முதல் இருந்தபோது மட்டும் தங்குமிடத்திற்கு சிக்கல் ஏற்படுத்தினார்கள்.

இவையெல்லாமே எங்களை போன்றவர்களை மீண்டும் சமூக செயற்பாட்டுகளிலிருந்து துண்டிக்க வைப்பது என்பதற்கான அரசு வழிமுறையாகவே பார்க்க வேண்டும்.

வரலாற்றில் எத்தனையோ பேர் சிறைக்கு சென்று வந்தவுடன் போராட்ட அரசியலில் இருந்து துண்டித்த வரலாறு இல்லை. சிறைக்குள் இருக்கும்போதே தனது குடும்பத்தாரை அரசிடம் கோரிக்கை வைத்துவிட்டு விடுதலையான வரலாறு உண்டு.

எழுச்சிகரமான மக்களை திரட்டும் போராட்ட வழிமுறைகளை கைவிட்டு அரசுக்கு வலிக்காத வகையில், அரசுக்கு நெருக்கடி வராத நிலையில் போராட்டங்களை மேற்கொள்ளும், சடங்குத்தனமான போராட்டங்களை முன்னெடுக்கும் எண்ணற்ற தலைவர்களை பார்த்ததும் உண்டு. தற்போது பார்த்துக் கொண்டும் உள்ளேன்.

எனவே சிறை, சிறைக்குள் உளவியல் நெருக்கடி, சிறைக்குள் வைத்தே தாக்க முயற்சிப்பது என்பதற்கு ஒரே பொருள்தான் நீங்கள் ஏன் மற்றவர்கள் போல் அரசுக்கு நெருக்கடி வராத வகையில் போராட மாட்டேன் என்கிறீர்கள் என்பது தான்.

கூர்மையின் கேள்வி: ஆனாலும், இப்படியான நெருக்கடிகள் குறித்தோ, தாக்குதல்கள் குறித்தோ சிறையில் இருந்து மீண்டவர்கள் வெளிப்படையாக பேசாமல்தானே வாழ்கிறார்கள்?

ஆம், உண்மை சிறைக்குள் நடக்கும் மனித உரிமை மீறல்களை சிறையிலிருந்து வெளியே வந்துள்ள சிறைவாசிகள் பகிர்வதில்லை. காரணம் ஏதாவது சொன்னால், வெளிப்படுத்தினால் மீண்டும் கைது செய்யப்பட்டு (பொய் வழக்கில்) சிறைபடுத்தி விடுவார்கள் என்ற அச்சம் தான். அதுபோன்ற குடிநாயக நடைமுறைகள் நாட்டில் நிலவி வருகிறது.

சிறை மனித உரிமை மீறல்களை சிறைக்கும் செல்லும் அரசியல் இயக்க தலைவர்கள், மக்கள் இயக்க தலைவர்கள் தான் வெளியே பேச வேண்டும். பேச முடியம். ஆனால் எனக்கு தெரிந்து யாரும் சிறை அடக்குமுறை - அத்து மீறல்- தாக்குதல் குறித்து வெளியே சொல்வதில்லை. சிறையில் இருக்கும் யாராவது அதிகாரிகளோடு சிறைக்குள் இணக்கம் காட்டி இருப்பார்கள். எனவே இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் வெளியிட்டு நெருக்கடி ஏற்படுத்த வேண்டாம் என்றோ அல்லது அடுத்த முறை சிறைக்கு செல்லும்போது தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் என்னைப் போன்றோர்கள் தொடர்ந்து சிறை முறைகேடுகளை - மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியே வருகிறோம்.

எளியோர் மீது சிறையில் சிறை விதிப்படி உணவு அளவிலும், தரத்திலும் இல்லாமல் இருப்பது, ஏதாவது சிறை விதிப்படி செய்வது, சிறைக்குள் முறையான மருத்துவம் பார்க்காமல் இருப்பது. வெளி சிகிச்சைக்கு அனுப்பாமலேயே இருக்க வைத்து நோயை முற்ற வைப்பது, மன நலம் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து வெளியே மீட்க உதவாமல் அவர்கள் உள்ள நிலையையே நீடிக்க வைப்பது, சிறைவிதிப்படி நல அலுவலகம் சிறைவாசிகளுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளது, அதை எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என அறியக்கூட செய்யாதது.

சிறு குற்ற வழக்குகளில் கூட அவர்களது தண்டனைக் காலத்தைவிட அதிகமான காலம் சிறையில் இருக்கும்படி நீதித்துறை வைத்திருப்பதை ஒழுங்குபடுத்த முயற்றிக்காதது. சிறையில் மருத்துவர்கள் இரண்டு மணி நேரம் மட்டும் இருந்துவிட்டு சென்று விடுவது, நீண்ட காலமாக சிறை உணவுகளில் மாற்றம் கொண்டு வராமல் இருப்பது (கேரளா, கர்நாடகத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர்).

குடும்பத்தாரோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ள இன்னும் வாய்ப்புகளை எளிமைப்படுத்தாமல் இருப்பது (கேரளாவில் 3 நாட்களுக்கு ஒரு முறை பேசலாம்- தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு ஒரு முறைதான் பேச முடியும்) என்பது போன்ற எண்ணற்றவை உண்டு. நான் சிறைக்கு என்னை பார்க்க வந்த உயர்நீதி மன்ற நீதிபதிகளிடம் இதுபற்றி விரிவாகவே மனு கொடுத்துள்ளேன்.

கூர்மையின் கேள்வி: இந்திய ஆட்சி முறையும் அதிகார அமைப்புமே காவல்துறையினரின் இத்தகைய செயல்பாடுகளை கண்டுகொள்வதும் இல்லை. அதேபோன்று, சிறைக்கூடமே மீண்டும் மீண்டும் தவறு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் விதமாகவே செயல்படுகிறது எனவும் கொள்ளலாமா?

உண்மை. சிறையில் குற்றங்களை செய்து வருபவர்களை திருத்தும் வழி முறை அரசிடம் இல்லை. ஒரு முறை குற்ற செயல்பாட்டில் சிறைக்குள் வந்தவர்கள் மற்ற சிறைவாசிகளோடு கூட்டணி சேர்ந்து நிரந்தர குற்றவாளியாகும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. ஒரு முறை தவறு செய்து சிறைக்கு வந்து வெளியே செல்பவர்கள் காவல்துறையால் மீண்டும், மீண்டும் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சமூகத்தில் இயல்பாக வாழ முடியாமல் குற்றவாளியாகவே தொடரும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நிரந்தர குற்றவாளியாக மாறி விடுகிறார்கள்.

சிறைக்குள் உணவு, உடை, இருப்பிடம் மட்டும் தரப்படுகிறதே ஒழிய அவர்களை திருத்தும், திருந்த செய்யும் நடைமுறை இல்லை.

கூர்மையின் கேள்வி: காவிரிப்படுகை மணல் கொள்ளை முதல் ஸ்டெர்லை மற்றும் கூடங்குளம் முதல் நியூட்ரினோ வரை தொடரும் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர் நீங்கள்? சமீபத்தில் இத்தகைய போராட்டங்களை ஒடுக்க அரச நிறுவனங்கள் வன்முறையினை கையில் எடுத்து வருவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் பார்வை என்ன?

நான் சிறையில் இருக்கும்போது ஸ்டெர்லைட் முதல் நாள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் வந்தார்கள். அவர்களோடு இரு முழு நாள் உடன் இருக்கும் வாய்ப்பு இருந்தது. போராட்டத்தை வலிமையாக்க எனது போராட்ட அனுபவங்களையும், பல்வேறு போராட்ட முறைகளையும் கூறி போராட்டத்தை தொடர வழிகாட்டினேன். அவர்களும் அதில் பலவற்றை எடுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்தினர். போராட்டம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

அரசு இதுபோன்ற துப்பாக்கி சூட்டை 100-ஆம் நாள் நடத்தும் என்றே என்னை சந்திக்க வந்தவர்களிடம் சொல்லி அனுப்பினேன். காரணம் கூடங்குளம், அலங்காநல்லூர் ஜல்லிகட்டு ஆகிய இரண்டு போராட்டங்களிலும் நான் முன்னின்று செயல்பட்டவன். அங்கு அரசை எதிர்த்த போராட்டத்தில் இருந்ததால் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு, கைது என்பதோடு நிறுத்திவிட்டது காவல்துறை.

ஆனால் கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்த போராட்டம் அப்படி இருக்காது என்பது தான் நான் அனுபவ பூர்வமாக அறிந்த உண்மை. கரூர் காவிரியில் ஆற்று மணல் கொள்ளையை எதிர்த்த போராட்டங்களில் காவல்துறை கண் முன்பே கொள்ளையர்களின் கையாட்கள் எங்களை தாக்கி கொலை செய்ய முயற்சித்தது, நாமக்கல் காகித ஆலை போராட்டத்தில் ஆலையின் அடியாட்கள் எங்களை காரில் வைத்தே கடப்பாரையை காருக்குள் சொருகி கொல்ல முயற்சித்தது, தாக்குதலுக்கு உள்ளான எங்கள் மீதே காவல்துறை பொய்யான வழக்குகளை பதிவு செய்தது என உணர்ந்து இருந்ததால் ஸ்டெர்லைட் எதிர்ப்பின் 100வது நாள் போராட்டத்தில் கட்டாயம் துப்பாக்கி சூடு நடக்கும் என தெரிவித்தேன்.

இந்திய நாட்டு சட்டங்களும், அரசின் கொள்கை முடிவுகளும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் நடவடிக்கைக்கு இட்டு செல்லும், நீதிமன்ற தீர்ப்பும் அப்படித்தான் இருக்கும். இது புதிதல்ல. கேரளா - பிளாச்சிமடாவில் மக்கள் போராடி தடுத்து நிறுத்திய அமெரிக்க கொக்கோ- கோலா ஆலையை மூடக்கூடாது. இது அரசின் கொள்கை முடிவு என கூறி ஆலையை தொடாந்து இயக்க உச்சநீதி மன்றம் அனுமதித்தது. ஆனால் மக்கள் போராட்டம் தான் இன்று வரை கொக்கோ -கோலா ஆலை இயங்க செய்யாமல் தடுத்து வருகிறது.

2013-ல் ஸ்டெர்லைட் ஆலை நச்சு வாயுவை கசிய விட்டதால் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்பட்டு ஆலை இயங்க தடைவிதிக்கப்பட்ட போது 100 கோடி டெபாசிட் கட்டி இயக்கலாம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஸ்டெர்லைட் ஆலை அரசாலோ, நீதிமன்ற தீர்ப்புகளாலோ கட்டாயம் மூடப்படாது, மூடப்பட முடியாது. மக்களின் எழுச்சிகரமான தொடர் செயல்பாட்டின் காரணமாகவே ஆலையை மூட வைக்கவும், அப்புறப்படுத்தவும் செய்ய முடியும்.

இது ஸ்டெர்லைட் மட்டுமல்ல, அரசுகள் கொண்டு வரும் அனைத்து நாசக்கார திட்டங்களுக்கு எதிரான வழிமுறை இது ஒன்று மட்டுமே. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வழிமுறை மக்கள் போராட்டம் தொடர்ந்து முன்னெடுப்பது மட்டுமே.

கூர்மையின் கேள்வி: எண்ணற்ற போராட்டங்கள், அறவழி முதல் சட்டப் போராட்டங்கள் என பல்வேறு வழிமுறைகளை கையாண்டும், அரசுகள் செவி சாய்ப்பதில்லையே! தீர்வு என்ன?

காங்கிரசோ, பா.ஜ.கவோ கொள்கை அடிப்படையில் வேறு வேறானவைகள் கிடையாது. இருவருமே நாட்டை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் நடைமுறை கொள்கையை கொண்டவர்கள் தான். எனவே புதிய ஒப்பந்தம், புதிய கையெழுத்து என்பதெல்லாமல் வளர்ச்சி என சொல்லிக்கொண்டு நாசக்கார திட்டங்களை வேகமாக செயல்படுத்துவதால் மீண்டும் ஒரு முறை பன்னாட்டு கம்பெனிகள் ஏஜென்ட் என்பதை நிரூபிக்கின்றார் மோடி.

நியூட்ரினோ, டென்சம், உட்பட இங்கு தமிழகத்திற்கு வரக்கூடிய நாசக்கார திட்டங்கள் இந்திய அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் கொண்டு வரப்படுகிறது என்று மட்டும் பார்க்க கூடாது.

தமிழகம் ஆட்சி உரிமை அற்ற அடிமை தேசமாக உள்ளது. நீண்ட நெடிய கொள்கையும், வரலாறும், தற்சார்பும் கொண்ட தமிழ் தேசிய இனத்தையே அழிக்க முயற்சிக்கும் செயல்பாடாகவும் பார்க்க வேண்டும்.

நாடு முழுக்க பல்வேறு தேசிய இனங்களின் வளங்கள் ஆளும் அரசுகளின் கொள்கையால் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டு இருந்தாலும், தமிழகம் மட்டும் தான் இந்திய தேசியத்தை கட்டமைக்க முயற்சிக்கும் பார்ப்பனிய சக்திகளின் சாதி ரீதியாக பிளவுபடுத்தி செய்யும் சாதிய ஒடுக்குமுறையையும், தமிழ் தேசத்தில் மீதான ஒடுக்குமுறையையும் உறுதியாக எதிர்த்து நிற்கிறது. இது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்துகிறது. எதை இந்திய ஆளும் வர்க்கம் செய்தாலும் அதை எதிர்க்கும் அறிவு பூர்வமான நடைமுறை தமிழகத்தில் உள்ளது.

முன்னோடிய தேசிய விடுதலைக்கு தயாரான நீண்ட கால வரலாறு கொண்ட போராட்டங்களை முன்னெடுக்கும் பஞ்சாப் - காஷ்மீர்-வங்காளம் - மராட்டியம் ஆகியவற்றில் கூட பார்ப்பனிய சக்தி பலமாக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பார்ப்பன சக்திகளும்- இந்திய தேசிய கட்சிகளும் துடைத்து எறியப்பட்டு இருப்பதை காணலாம்.

எனவே நியூட்ரினோ, கூடங்குளம், உட்பட அனைத்து நாசக்கார திட்ட எதிர்ப்பில் அரசை எதிர் கொள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எழுச்சிப்பெறச் செய்து, இதை தமிழ்த்தேசத்தின் தற்சார்பு போராட்டமாக மாற்ற வேண்டும். இது மட்டுமே நிரந்தர தீர்வை தரும்.